உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. ஓருலகில் தமிழனுக்கு
இடம் இல்லையா?


"பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பொதுவரசாகி, ஓருலகத்துக்கே உரிய ஒரு முதற்படியாய் இருக்கும் போது, நீ ஏனப்பா சுயராஜ்யம், பூரண சுதந்தரம் வேண்டுமென்கிறாய்?" என்று பழைய ஏகாதிபத்தியம் கேட்டது, இந்திய விடுதலை இயக்கத்தாரிடம்! பூரண சுதந்தரம், முழு நிறை விடுதலைக்குப் பதில், ஏகாதிபத்தியப் புத்துருவான பொதுவரசில் ஓர் உறுப்பாக இருக்கும் அரும்பெரும்பேறு போதும்; அதற்காக மன்னரை இணைப்புக் குறியாக ஏற்கும் ஒரு புது வகைக் குடியரசாகக்கூட நான் வேசம் போடுகிறேன் என்று கெஞ்சிய குட்டி ஏகாதிபத்தியம் இப்போது உண்மைத் தேசியவாதிகளை, திராவிட உயிர்த் தேசியவாதிகளைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கிறது.

அந்தோ, காலந்தான் மாறிவிட்டது. பண்பு மாறவில்லை. நிலைமை மாறவில்லை! ஐயோ, பாம்பு மடியவில்லை. சட்டை மாற்றிக்கொண்டு புத்துருவில், புதிய பளபளப்புடனும் புத்திளமையுடனும் சீறுகிறது!

ஒரே உலகத்தில் ஒரே பாரதம் வேண்டுமென்று முழங்கி, பின் துண்டுபட்டால்கூட மீந்த பாரதம் போதுமென்று கையேந்தி வாங்கிய இந்தக் குட்டி ஏகாதிபத்தியவாதிகளின் முன்னோர்களான விடுதலை வீரர்கள் எதற்காக, எந்த விடுதலை கோரி, எந்த ஒரே உலகத்தில் ஒரே பாரதம்கோரிப் பாடுபட்டுத் தேடி அதைக் கடைசியில் இந்த ஏகாதிபத்தியத்திடம் பறி கொடுத்துவிட்டுப் போனார்களோ, அதே விடுதலைக்காக, அதே ஒரே உலகில் ஒரே திராவிடத்துக்காக, அதே காரணத்தை முன்னிட்டு, ஆனால் அந்தக் காரணத்தைவிட மேலான வரலாறு உயிர்த் தேசியத் துடிப்புடன், திராவிடரும் திராவிட இயக்கத்தவரும் திராவிட நாடு கோருகிறார்கள். ஆனால் டில்லி ஏகாதிபத்தியம் பழைய