உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

181

ஒற்றுமை என்ற பெயராலேயே வேற்றுமையை, சமரசம் என்ற பெயராலேயே இன வேறுபாட்டை, ஒருமை என்ற பெயராலேயே ஏகாதிபத்திய அடிமைத்தனத்தைப் புகுத்தி விடுவதில் பாரத பக்தர் ‘சமர்த்தர்', அசகாய சூரர். அவர்கள் இனவேறுபாடு வேண்டாம் என்பர். ஆனால், இனமே வேண்டாம், இனப் பெயர் கூறிச் சமத்துவம் கோர வேண்டாம் என்பதே இதன் உட்கிடக்கைப் பொருள். இன எல்லையை அழித்துவிட்டு, ஒரு இனத்தவர் ஆண்டார்களாகவும் மறு இனத்தவர் அடிமைகளாகவும் இருக்கும் நிலை மீது திரையிட்டு, ஆண்டான் அடிமைகளாகவே அந்தக் கூட்டு நிலைத்திருக்கட்டும் என்று பல்லவி பாடுகிறார்கள். ஒரு இனத்துக்குமட்டும் உரிமை, ஒரு இனத்துக்கு மட்டும் கடமை என்ற அநீதியின் மீது அடிமை இனத்தவர் கருத்துச் செலுத்தக் கூடாது. அவர்கள் அறிவுக்கண் பட்டுவிடக்கூடாது என்பதே அவர்கள் சமரச கீதத்தின் ‘தாத்பரியம்’

இனங்களிடையே காட்டப்படும் இதே சமரச கீதம்தான் அரசியல் எல்லையில் அவர்கள் தேசியகீதம் ஆகும். வடக்கு ஆளும் இனம், தெற்கு ஆளப்படும் இனம்; வடக்குக்கு உரிமை, செல்வ வளம், இயந்திரத் தொழில் வளம்; தெற்கு கடமையுடன், வறுமையுடன், குடிசைத்தொழில் பெருமையுடன் மனநிறை வடைய வேண்டும் என்பதே அவர்கள் கோரும் போலித் தேசியம், போலி ஒற்றுமை, அவர்கள் ஒற்றுமை, சமரசம், தேசியம், ஏக பாரதம் என்பதெல்லாம் இதுதான். வடநாடு வாய், வயிறு; தென்னாடு கால், கை, வால்!' இது அவர்கள் உட்கிடக்கை.