உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 அப்பாத்துரையம் - 11

அக்குடிசைகளை அடிக்கடி தூக்கிச் சென்றான். தினை அரிசி, மூங்கிலரிசி ஆகியவற்றை அவன் வாரி வந்து சமைத்து உண்டான். மனிதனின் முதன்முதல் செல்வம் மாடு. தமிழில் மாடு என்ற சொல் எருது, செல்வம் என்ற இருபொருளும் உடையது. இலத்தீன் முதலிய பிற மொழிகளிலும்[1] இவ்விரு பொருளும் ஒரு சொல்லில் அமைந்துள்ளன.

முல்லை நில மக்கள் ஆயர் எனப்பட்டனர். பெரிய மந்தையை யுடையவன் தலைவன் ஆனான். ஆயன், ஐயன் என்ற பெயர்கள் தமிழில் தலைவன் என்று பொருள்படும். அத்துடன் தமிழில் 'கோ' என்னும் பெயர் பசுவையும் அரசனையும், ‘கோன்’ என்பது மாடு மேய்ப்பவனையும் அரசனையும் குறிக்கும். முதன் முதல் அரசு ஏற்பட்டது இந்நிலத்திலேயே என்பதை இது காட்டுகிறது. 'கோ' இருந்த மனையே கோட்டை ஆயிற்று. பிற்காலத்திலும் அரசன் மனை அரண்மனை அதாவது கோட்டை வீடு எனப் பெயர்பெற்றது காணலாம். கோயில் என்ற சொல் அரசன் மனையையும் கடவுள் வழிபாட்டு இடத்தையும் ஒருங்கே குறிக்கிறது. அரசியல் வாழ்வைப் போலவே சமய வாழ்வும் இந்த நாகரிகப்படியிலேயே தோன்றி வளர்ந்தது.

பாலை நிலத்தில் வாழ்ந்தவர் எயினர், மறவர் எனப்பட்டனர். இந்நிலம் நில அடிப்படையில் மனித நாகரிகத்துக்குப் பயன்படவில்லை. அது வழிப்பறிக்குரிய இடமாயிருந்தது! ஆனால், மறவர் படிப்படியாக அரசர்களைச் சார்ந்து அவர்கள் படையில் வீரர்களாகி அரசு காத்தனர். தமிழர்களை முதல் பேரரசர் ஆக்கியவர்கள் இந்த மறவர்களேயாவர். நெய்தல் நிலத்திலுள்ள பரதவர் அவர்களைக் கடற் பேரரசராக்க உதவினர்.


நகர் நாடு

ஆற்றுவெளியிலேயே மனிதநாகரிகம் முழு வளர்ச்சியடைந்தது. உழவு (வேளாண்மை) இதன் தலைத்தொழிலாயிற்று. இதில் வாழ்ந்தவர் வேளாளர் எனப்பட்டனர். மனித சமுதாயத்தில் குடியாட்சி பிறந்த நிலம் இதுவே. வேள் என்ற சொல் தமிழில் முடிசூடா மன்னனைக் குறிக்கும். இதே சொல்லுக்குப் படைவீரர், வணிகர், தொழிலாளர், கடவுள், கடவுள்

  1. ↑ 1