உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 23

வழிபாடு என்ற பொருள்களும் உண்டு. இதற்கேற்ப இந்நிலத்தில் வேளாளரிடையே அந்தணர், அரசர் அல்லது வீரர், வணிகர், உழவர் ஆகிய மூல வகுப்புகளும், பல கலைத் தொழில்களும், தொழில்களுக்கு உரிய கிளை வகுப்புகளும் தோன்றின. குடியுரிமை மன்னரின் தலைவராக, முடியுரிமை மன்னரும் ஏற்பட்டனர். இம்மன்னர் ஆண்ட பேரூர் அல்லது நகரமும், கோட்டையும், அதைச் சார்ந்த சிற்றூர்களும், மலையும், காடும், ஆறும், கடற்கரையும் சேர்ந்து ஒரு நாடு ஆயின. இத்தொடக்கக் கால நாட்டைமேனாட்டு வரலாற்று நூலாசிரியர் [1] 'நகர் நாடு' என்பர்.

கடற்கரைப் பகுதி அல்லது நெய்தல் நிலம் முதலில் நாகரிகத்தில் பிற்பட்டே இருந்தது. இதிலுள்ள மக்கள் பரதவர் எனப்பட்டனர். மீன், உப்பு, சங்கு, முத்து ஆகிய கடல் வளத்தாலும், கடல்கடந்த வாணிகத்தாலும் இப்பகுதி விரைவில் ஆற்று நிலத்துடன் நாகரிகத்தில் போட்டியிட்டது. துறைமுக நகரங்கள் தமிழில் பட்டினங்கள் என்றழைக்கப்பட்டன.

தமிழகத்தில் மட்டுமன்றித் தென்னாடெங்கும். அதற்கப்பாலும், பட்டினம் என்ற தமிழினப்பெயர் இன்றும் காணப்படுகின்றது. மன்னரோடொப்பச் செல்வம் திரட்டிய வணிக மன்னர் இப்பட்டினங்களில் வேயாமாடங்கள் அல்லது காரை வீடுகள் கட்டி இன்பவாழ்வு வாழ்ந்தனர். பல நாடு கண்ட வணிக அறிஞர், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பெருமித உணர்வுடன் வாழ்ந்தனர்.

தமிழில் நகர் அல்லது மருதநிலப் பேரூரில் வளர்ந்த பண்பாடே நாகரிகம் எனப்பட்டது. ஆயினும் நகரநாகரிகம் தாண்டிப் பட்டின நாகரிகம் நாடுகடந்த உலகப் பண்பாக வளர்ந்தது. தமிழர் நாகரிகத்துக்கு அடிப்படையான பண்பு இவ்வுலகப் பண்பேயாகும்.


கற்காலம்

உலக முழுவதும் நாகரிகம் ஒரே சமகால வளர்ச்சியாக வளரவுமில்லை; ஒரே தொடர்ந்த வளர்ச்சியாக அமையவுமில்லை. உலக நாகரிகத் தொடர்பற்ற ஒதுக்கிடங்களில் - பொதுவாக மலைக்குடியினரிடையிலும், சிறப்பாக வடதுருவப்

  1. 2