உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 அப்பாத்துரையம் 11

பகுதியிலும், ஆப்பிரிக்க ஆஸ்திரேலியப் பகுதிகளிலும்-குகை மனித நாகரிகம், கற்கால நாகரிகம் ஆகிய நிலைகளிலுள்ள மக்கள் இன்றும் வாழ்கின்றனர். வரலாற்றிலும் தென்ஐரோப்பா, நடுஉலகு, தென்னாடு ஆகிய இடங்களில் நாகரிகம் சிறந்திருந்த காலங்களில், வடஐரோப்பாவும் வடஉலகும் நாடோடி மக்களின் வேட்டைக் காடுகளாயிருந்தன. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இந்நாடோடி மக்கள் நாகரிக உலகின்மீது பரந்து தாக்கினர், பண்டைய நாகரிக ஒளிமங்கி மறுகிற்று, கி.பி.5ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையுள்ள இக்காலத்தை நாம் இடைஇருள் காலம் என்கிறோம்.

சென்ற ஐந்நூறு ஆண்டுகளுக்குள் உலகில் சிறப்பாக மேனாட்டில் நாகரிகம் மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. இடைக்கால இருள் கடந்து பழங்கால நாகரிக ஒளியின் ஊற்றைத் தற்காலத்துக்குக் கொண்டுவரப் பாலமாயிருந்த நாகரிகங்கள் கிரேக்க உரோம நாகரிகங்களும், தென்னாட்டு நாகரிகமுமேயாகும். கிரேக்க உரோம நாகரிகங்கள் மேனாட்டுக்கு ஒளி தந்தன. தென்னாடு கீழ்த்திசையில் சிந்து கங்கை சமவெளி வாயிலாக இதுவரை ஒளி வீசியுள்ளது; நேரடியாக இன்னும் ஒளிவீச இருக்கிறது எனலாம்.

பழங்கற்கால மனிதன் நாகரிகம் தென்னாட்டில் கி.மு.40,000-வது ஆண்டுக் காலத்துக்குரியது என்று கூறப்படுகிறது. அதாவது அது 42,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தென்னாடு முழுவதும்-சிறப்பாகக் கடப்பை, கர்னூல் பகுதிகளிலும் அதன் தெற்கிலும்-அதன் சின்னங்களை நாம் காண்கிறோம். அதே சமயம் தென்னாட்டுக்கு அப்பாலுள்ள சிந்து கங்கை சமவெளியில் நாம் அவற்றை அவ்வளவாகக் காணமுடியவில்லை. ஆனால், புதுக்கற்காலச் சின்னங்கள் தென்னாட்டில் சிந்து கங்கைவெளியிலும் ஒரேபடியாகக் காணக்கிடக்கின்றன. இதனால், பழங்கற்காலத்தில் மனித நாகரிகம் தென்னாட்டிலேயே தோன்றி வளர்ந்தது என்றும், புதுக் கற்காலத்தில் அது தென்னாட்டின் வடஎல்லை தாண்டி இமயமலைவரை ஒரே பரப்பாகப் பரந்து விரிவுற்றது என்றும் அறிகிறோம்.