உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 25

இன்று தென்னாட்டில் காணப்படாத பல விலங்கினங்களும், உலகிலேயே இக்காலத்தில் மரபற்று அழிந்துபோன விலங்குகளும் பழங்கற்காலத்தில் தென்னாட்டில் இருந்திருக்க வேண்டும். விந்தியமலைப் பகுதிகளில் நமக்கு இவற்றின் எலும்புக் கூடுகள் அகப்படுகின்றன. இவ்வெலும்புகளின் அருகிலேயே குகை மனிதன் அல்லது பழங்கற்கால மனிதன் கரித்துண்டு கொண்டு வரைந்த இவ்விலங்குகளின் கல்லாச் சித்திரங்கள் தென்படுகின்றன. இவற்றுள் மரபற்றுப்போன காண்டா மிருகம் போன்ற விலங்கு, [1] பைம்மா, மான், குதிரை, யானை ஆகியவற்றின் வேட்டைக்காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன.

கடப்பையிலும் கர்னூலிலும் உள்ள பழங்கற்காலக் கருவிகள் அவ்விடத்திலுள்ள பாறை வகைகளிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளன.

தென்னாட்டில் பழங்கற்காலத்திலிருந்து புதுக்கற்கால நாகரிகமும், புதுக் கற்காலத்திலிருந்து செம்பு, வெண்கல, இரும்புக்கால நாகரிகங்களும் உலகின் மற்றப் பகுதிகளைத்தாண்டி மிகவிரைந்து வளர்ந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனென்றால், பழங்கற்காலக் கருவிகளையடுத்துப் புதுக்கற்காலக் கருவிகள் அகப்படுகின்றன. அத்துடன் புதுக்கற்காலக் கருவிகளுடனே, ஆனால், அரும் பொருள்களாக, செம்பு வெண்கலக்கருவிகளும் பொன், வெள்ளி அணிகலன்களும், சிலசில இடங்களில் இரும்புக் கருவிகளும்கூடக் கிடைக்கின்றன. புதுக்கற்காலத்திலேயே இவ்வுலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், இவை போதிய அளவில் நாகரிக உலகெங்கும் கிடைக்கவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

தவிர, புதுக் கற்காலத்திலேயே, கல்லால்செய்த நெசவுக் கருவிகளை நாம் தமிழகத்தில் கண்டெடுத்திருக்கிறோம். நாகரிக மனித உலகின் கனவுக்கெட்டாத இத்தொல்பழம் பண்டைக்காலத்திலேயே, தமிழர் பருத்தியின் பயன் அறிந்து, பஞ்செடுத்து, நூல்நூற்று, நெய்யக் கற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை இதனால் அறிகிறோம். இது வியப்பினும் வியப்போயாகும்! ஐரோப்பியர் பஞ்சை அறிவதற்குக் குறைந்தது பதினாயிரம் ஆண்டுகட்குமுன்னே தமிழர் அதைஅறிந்து பயன்படுத்தி இருந்தனர்.

  1. 3