உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 அப்பாத்துரையம் - 11

பழங்கற்காலத்தில் மனிதன் உயிர்நீத்த தன் இனத்தவர் உடல்பற்றிக் கவலை கொள்வில்லை. கற்களைச் செப்பம் செய்யும் அறிவு அவனுக்கு இன உணர்வையும் இனப்பற்றையும் உண்டு பண்ணியிருந்தது. ஆகவே, அவன் இறந்த உடலைப் புதைத்து, அக்குழியை நாய்நரிகள் கிளறாமலிருப்பதற்காக, அதன்மீது கற்குவியல்களைக் குவித்து வைத்தான். சில இடங்களில் கும்பிடு வடிவிலும், தலைகவிழ் பகரவடிவிலும்[1]கல் தாங்கிகள் அமைத்தான். ஆனால், தமிழ்நாட்டில் அவன் இவற்றுடன் அமையவில்லை. உடலை அவன்[2] புதை தாழிகளில் அடக்கம் செய்தான்.

பழங்கற்காலத்திலேயே மனிதன் தீக்கல்லைக்கண்டு, தீ உண்டுபண்ணக் கற்றிருக்க வேண்டும். பின்னாட்களில் தீயுமிழ் மரங்கண்டு தீக்கடைகோலும் வழங்கியிருக்கலாம். இவற்றின்மூலம் அவன் சமைத்துண்டதுடன், தனக்கு வேண்டிய பாண்டங்களையும் களிமண்ணால் செய்யக் கற்றிருக்கவேண்டும். புதுக் கற்காலத்தில் தென்னாட்டினர் செய்த அழகிய கலைவேலைப்பாடமைந்த மட்பாண்டங்களையும், மரச்சீப்பு, எலும்பு ஊசி முதலிய கருவிகளையும் நாம் புதை தாழிகளிலும், அவற்றினருகிலும் காண்கிறோம்.

தாழிகளுடன் கோலாப்பூரிலும் மிஸ்ரப்பூரிலும் கண்டுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மிகஉயர்ந்த கலைப்பண்பாடு உடையவை, சென்னை, மைசூர், ஹைதராபாத், பம்பாய் ஆகிய இடங்களில் இரும்பு கருவிகள் கூட அகப்படுகின்றன. மிகப்பழமை வாய்ந்த, முக்கியத்துவம் பொருந்திய ஈமத்தாழிகள் பல்லாவரம். செங்கற்பட்டு, நெல்லூர், ஆர்க்காடு, ஆதிச்சநல்லூர், புதுக்கோட்டை இத்தகைய பொருள்களுக்கு ஒரு காட்சிக் கூடமாகவே விளங்குகின்றன.

புதுக்கற்காலத் தென்னாட்டு நாகரிகம் சிந்து கங்கைவெளி எங்கும் பரந்து, சிந்துவெளி நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புகளும் ஒப்புமைகளும் உடையதாயிருந்தது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் செட்டிப்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆட்டு வடிவமுடைய மூடி வாய்ந்த கோப்பை, பாரசீகத்தில் லூரிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டவற்றுக்கு இனமாயிருக்கிறது. பல்லாவரத்தில் மணல் கலந்த களிமண்ணால் செய்யப்பெற்ற குறுங்கால் மனித உருவம், ஈராக்

  1. 4
  2. 5