3. பண்டைப் பரப்பு
(கி.மு.3000 – கி.பி.300)
தென்னாட்டின் நாகரிக வரலாற்றுக்கு மண்ணூல் உதவுகிறது. புதை பொருளாராய்ச்சி உதவுகிறது. சிந்துவெளி ஆராய்ச்சி அத்துறைக்கு மிகவும் வளம் தருகிறது. ஆனால், அரசியல் வரலாற்றை இவை விளக்கப் போதவில்லை. புராண மரபு, மக்கள் மரபு, இலக்கிய மரபு ஆகிய மூன்றும் இத்துறையில் ஓரளவு உதவுகின்றன. ஆனால், அவை தரும் ஒளி மின்னல் ஒளியாகவோ, மின்மினி ஒளியாகவோதான் இருக்கிறது. முதல் இரண்டு மரபுகளின் மெய்யுடன் பொய் கலந்துள்ளது. எது பொய், எது மெய் என்று பிரிப்பது எளிதாயில்லை. இறுதி மரபு நிறையச் செய்திகள் தருகின்றன. ஆனால், அவற்றை முற்றிலும் காலவரிசைப்படுத்த நமக்கு இன்னும் போதிய சாதனங்கள் கிட்டவில்லை.
திருவிளையாடற் புராணம் பாண்டியர் மரபின் வரிசைப் பட்டியலும், பல சோழ மன்னர் பெயர்களும் தருகின்றது. ஆனால், இவை நமக்குத் தெரிந்த வரலாற்றுச் செய்திகளுக்கு முரண்படுகின்றன. இலக்கியத்தால் அறியப்படும் செய்திகளுக்கும் மாறுபடுகின்றன. இந்நிலையில் அப்புராணம் நமக்குச் சிறிதும் பயன்படவில்லை.
திருவிளையடற் புராணம் ஒன்றல்ல - பல. அவை ஒன்றுடன் ஒன்று மாறுபடுகின்றன.
சேர, சோழ பாண்டியர் முத்தமிழரசர். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்டனர். இதை நாம் வரலாற்றில் தெளிவாக அறிகிறோம். ஆனால், மக்கள் மரபும் இலக்கிய மரபும் அவர்கள் உலகத்தொடக்கமுதலே மூன்று அரசர் மரபுகளாக இருந்தன என்று கூறுகின்றனர்.