உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 அப்பாத்துரையம் – 11

மூன்றும் முதலில் ஒரே அரச மரபாயிருந்தது என்று மலையாள நாட்டு மக்கள் மரபும் இலக்கிய மரபும் குறிக்கின்றன. அதன்படி ‘மாவலி' என்ற அரசன் தென்னாடு முழுவதையும் ஆண்டான். அவன் பாண்டிய மரபைச் சேர்ந்தவன். அக்காலத்தில் தென்னாட்டில் ஒரே மொழி, பழந்தமிழ்தான் வழங்கிற்று. சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வுகள் இல்லை. ஆனால், மாவலிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் பாண்டியன், சோழன், சேரன், ஆந்திரன், கன்னடன் என்பவர். ஐவரும் தந்தையுடன் முரண்பட்டனர். அத்துடன் ஒருவருடன்ஒருவர் போராடினர். வெளிநாட்டுச் சூழ்ச்சிக்காரனான வாமனன் அவர்களைத் தூண்டிவிட்டான். மாவலி, புதல்வர் மடமைக்கு வருந்தினான். அதே சமயம் அவன் போரையும் விரும்பவில்லை. ஆகவே, நாட்டை ஐவருக்கும் பிரித்துக் கொடுத்துச் சென்றான். ஐந்து நாடும் ஐந்து மொழி நாடுகள் ஆயின. சோழனும் பாண்டியனும் பிற்காலத்தில் ஒன்றுபட்டதனால், இரண்டு நாடுகளும் ஒரே செந்தமிழ் நாடு ஆயின. மற்றவை கொடுந்தமிழ் நாடுகளாயின.

பாண்டியன் என்ற சொல்லின் பொருள் இந்த மலையாள நாட்டு மரபுக்கு வலிமை தருகிறது. 'பண்டு' என்றால் பழைமை. பாண்டியநாடு பழம்பெருநாடு என்று தமிழ் இலக்கியத்தில் போற்றப்படுகிறது.

அது மட்டுமன்று, மூன்று தமிழரசுகள் இருந்தாலும், தமிழுக்கு முதலுரிமை பெற்றது பாண்டி நாடே. அதில் மட்டுமே சங்கம் இருந்தது.

தமிழ்நாட்டு மக்கள் வாய்மொழி, இலக்கியம் இரண்டிலும் இரண்டு பழம் பெருமரபுகள் நமக்கு வந்து எட்டியுள்ளன.

ஒன்று கடல் கொண்ட தமிழக மரபு; மற்றொன்று முச்சங்கமரபு.

கடல் கொண்ட தமிழக மரபு வருமாறு:

குமரிமுனைக்குத் தெற்கே, இன்று குமரி மாகடல் அலைபாயுமிடத்தில், ஓர் அகன்ற நிலப்பரப்பு இருந்தது. அதில் குமரிக்கோடு, பன்மலை முதலிய மலைகளும்; குமரி, பஃறுளி முதலிய ஆறுகளும் இருந்தன.