தென்னாடு 41
மற்றும் பஃறுளியாற்றுக்குத் தெற்கே தென்பாலிமுகம் என்ற நாடும்; பஃறுளி குமரி ஆறுகளுக்கிடையில் ஏழ்தெங்க நாடு, எம்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகரை நாடு, ஏழ்குறும்பனை நாடு ஆகிய 49 நாடுகளும், குமரியாற்றுக்கு வடக்கே பன்மலையை அடுத்துக் குமரி கொல்லம் நாடுகளும் ஆகமொத்தம் 52 நாடுகள் இருந்தன.
பஃறுளி ஆற்றின் கரையில் பாண்டியர் முதல் தலைநகரமான தென்மதுரையும், குமரியாற்றின் கடல்முகத்தில் இரண்டாம் தலைநகரமான அலைவாய் அல்லது கவாடபுரமும் இருந்தன. இத்தனையும் கடல்கொண்டபின் வைகையாற்றின் கரையிலுள்ள மதுரை கடைசித் தலைநகரமாயிற்று.
முச்சங்க மரபு
முச்சங்க முத்தமிழ் மரபு கடல்கொண்ட தமிழக மரபுடன் இயைபும் தொடர்பும் உடையது. இறையனார் அகப்பொருள் என்ற நூலின் பழமையான உரை இதை விளக்கமாகத் தருகிறது. பாண்டியர் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் நிறுவினார்கள்.
தலைச்சங்கம் காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை, 89 பாண்டியர் காலங்களில் 4440 ஆண்டுகள் தென்மதுரையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 549. பாடும் பெருமை சான்ற 7 பாண்டியர் உட்பட பாண்டிய புலவர் தொகை 4449. தலைசிறந்த புலவர்கள் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றமெரித்த குமரவேள், நிதியின் கிழவன், அகத்தியன், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலியோர். மற்றும் அதங்கோட்டாசான், தொல்காப்பியனார், பனம்பாரனார் ஆகியோரும் இச்சங்கத்தவர் என்று கூறப்படுகிறது.
இச்சங்கத்தில் பாடல் பெற்ற நூல்கள் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியம்; இயல் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம்; முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள்; முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நாடக நூல்கள் ஆகியவை. மற்றும் பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அவிநயம், நற்றத்தம், வாமனம், புறப்பொருள், பன்னிருபடலம் ஆகியவையும் இச்சங்க காலத்தவை என்று குறிப்பிடப்படுகின்றன.