உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 அப்பாத்துரையம் 11

இடைச்சங்கம் வெண்தேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை, 59 பாண்டியர் காலங்களில், 3700 ஆண்டுகள், கவாடபுரம் அல்லது அலைவாயில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 59. பாடும் பெருமைசான்ற 5 பாண்டியர் உட்பட, பாடிய புலவர்தொகை 3700. தலைசிறந்த புலவர்கள்: அகத்தியர், தொல்காப்பியர் நீங்கலாக, இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க்காப்பியன், சிறுபாண்டரங்கன், துவரைக் கோன், கீரந்தை ஆகியவர்கள்.

அரங்கேற்றப்பட்ட நூல்கள் கலி, குருகு, வெண்டாளி வியாழமாலை அகவல் ஆகியவை. தவிர, மேற்கோள் நூல்களாக மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவையும் கொள்ளப்பட்டன.

கடைச்சங்கம், முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பாண்டியர் காலங்களில், 1950 ஆண்டுகள், வைகைக் கரையிலுள்ள மதுரையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 49. பாடும் பெருமைசான்ற 3 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 449. தலைசிறந்த புலவர்கள் சிறுமேதாவியார். சேந்தம்பூதனார். அறிவுடை அரனார். பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள்.

பாடப்பட்ட நூல்கள்: நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன.


புராண மரபும் தமிழ் மரபும்

இந்த இரண்டு மரபுரைகளும் புராண மரபுரைகள் அல்ல. ஆனாலும் அவற்றில் புராணமணம் வீசாமலில்லை. தெய்வங்கள் புலவருடன் வந்து இடம் பெறுகின்றனர். ஆண்டுகள் ஆயிரம் பதினாயிரக் கணக்கில் காட்சியளிக்கின்றன.

ஆனால், இவற்றைப் பொய் என முற்றிலும் விலக்கிவிடவும் முடியவில்லை. அவற்றில் போதிய உண்மைகள் இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகார நூல் மரபு, உரைமரபு முதலியவை வலியுறுத்துகின்றன.