உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 அப்பாத்துரையம் 11

கடைசிக்கண்ணுவ அரசனை வீழ்த்தி இமயம்வரை தன் பேரரசைப் பரப்பினான்.

சிந்துவெளிக்கு அப்பாலிருந்து வந்த சகர் தென்னாட்டின் வடக்கெல்லையில் ஆண்டனர். அவர்கள் சகப்பேரரசரின் கீழ் சத்திரபர் அல்லது மாகாண ஆட்சியாளராயிருந்து பின் தனியரசராயினர். அவர்களுடன் ஆந்திரர் போராட வேண்டிவந்தது.

ஆந்திரப் பேரரசருள் புகழ்மிக்கவன் கி.பி.113 முதல் கி.பி.138 வரை ஆண்ட கௌதமிபுத்ர சதகர்ணி ஆவன். இவன் சத்திரபன் நாகபாணன் என்பவனைக் கொன்று அவன் கையில் சிக்கிய நாட்டுப் பகுதியை மீட்டான். ஆனால், சாஷ்டணன் என்ற அடுத்த சத்திரபன் மீண்டும் வெற்றியடைந்தான். கி.பி.184 முதல் 213 வரை ஆண்ட யக்ஞசிரீ மீண்டும் சில வெற்றிகள் கண்டான்.

ஆந்திரப் பேரரசர் திரையர் அல்லது பல்லவர் மரபைச் சேர்ந்தவரே. பெயருக்கேற்ப அவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தனர். அவர்கள் நாணயங்களில் இரு பாய்மரமுடைய ஆழ்கடலோடும் கப்பல் பொறிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் ஆந்திர கருநாடக தமிழகக்குடிகள் கடல்கடந்து வாணிகக் குடியேற்றங்கள் அமைத்திருந்தனர்.

கனகவிசயர்

சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் படையெடுத்தது கௌதமி புத்திரனுக்கும் யக்ஞசிரீக்கும் இடைப்பட்டகாலம் ஆகும். அவனுக்கு உதவிய நூற்றுவர் கன்னர் என்பவர் ஆந்திர சதகர்ணிகளே எனக் கூறப்படுகிறது. ஆந்திரரின் எதிரிகளாகிய சக அரசர்களுள் குஷாண அரசனான கனிஷ்கனும் அவன் கீழ்ச் சிற்றரசனான விசயாலயனும் சேர்ந்திருந்தனர். தோற்ற கனகவிசயர் இந்த கனிஷ்கனும் விசயாலயனுமேயாவர் என்று பல வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். அதற்கேற்ப, கனிஷ்கனின் பின்னோர் புத்தசமயம் விடுத்துச் சைவசமயம் சார்ந்திருந்தனர். செங்குட்டுவனும் மற்றத் தமிழரசரும் புத்தரால் அலைப்புரண்ட வடஆரியருக்குத் தமிழகத்தில் சதுர்வேதி மங்கலங்கள் அளித்தும், அவர்கள் ஆதரவுக்காக வேள்விகள் நடத்தியும் வந்தனர். வேள்விக்குடிப் பட்டயமும் இலக்கியக் குறிப்புக்களும் இதற்குச் சான்று பகர்கின்றன.