உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 61

லேயே அசோகன் ஆட்சி எல்லை மைசூருக்கு வந்தெட்டிற்று. பிற்காலத்தில் மைசூரில் மேல்கங்கரும் கலிங்கத்தில் கீழ்கங்கரும் ஆட்சி செய்ததை நோக்க, இரண்டு கோடிகளும் ஒரே பண்டைய கங்க மரபினரால் ஆளப்பட்டன என்று எண்ண இடமுண்டு.

மேனாட்டு வரலாற்றாசிரியர் கூட, கலிங்கத்தை ஒரு சிறிய அரசாகக் கொண்டு, மைசூர் வரை மோரியர் எப்போது வென்றனர் என்று ஆராய்ந்து முடிவு காணாது இடர்ப்படுவர்!

அசோகனுக்குப் பின் மோரியப் பேரரசு சிதறுண்டது. ஆந்திரரும் கலிங்கரும் தலை தூக்கினர். ஆந்திரர் கி.மு.220 முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்து பேரரசராய், கி.பி.225 வரை ஆற்றல்மிக்க வல்லரசராய் விளங்கினர். அவர்கள் தாயகம் விந்திய மலைப்பகுதியே என்று பல வரலாற்றறிஞர் கருதினர். ஆனால், புதிய கல்வெட்டுக்களால் அவர்கள் சங்ககால ஆய் அண்டிரன் மரபினரே என்றும், கடப்பை கர்னூல் மாவட்டங்களிலுள்ள அண்டிரா மலையையும் அண்டிரா ஆற்றையும் சார்ந்தவர்களே என்றும் அறிகிறோம்.

ஆந்திர அரசுக்கு வடமேற்கிலுள்ள கலிங்க அரசில் கி.மு.170 முதல் கி.மு.159 கடந்து காரவேலன் என்ற புகழ்மிக்க பேரரசன் ஆண்டான். அவன் சமண மதத்தைச் சார்ந்தவன். அதைப் பரப்புவதில் அவன் ஓர் இள அசோகனாக விளங்கினான். அவன் தென்னாட்டின் வட பகுதியை வென்றதுடன், கி.மு.163-ல் மகத நாட்டையும் வென்று பேரரசனாக விளங்கினான்.

காரவேலன் காலத்தில் ஹத்திகும்பக் கல்வெட்டு தமிழக மூவரசுகளின் ஒற்றுமை பற்றியும் வலிமை பற்றியும் குறிப்பிடுகிறது. 113 ஆண்டுகளாகக் கலிங்கப் பேரரசு விரிவடைய வொட்டாமல் தமிழரசர்களின் கூட்டுறவு தடுத்து நிறுத்தியதாக அது தெரிவிக்கிறது. வடதிசையில் வெற்றிகண்ட காரவேலன் படைகள் தெற்கே இத்தமிழ்ப் படையால் மீண்டும்மீண்டும் தோல்விகள் கண்டன.

காரவேலனாட்சியால் ஆந்திரர் வளர்ச்சி சிறிதே தடைப்பட்டிருந்தது. அவனுக்குப் பின் தென்னாட்டின் கீழ்கடல் வரையும் மேல்கடல் வரையும் அவர்கள் ஆட்சி பரந்தது. கி.மு.26-ல் ஆந்திரப் பேரரசன் முதலாம் புளுமாயி, மகதத்தை ஆண்ட