உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 அப்பாத்துரையம் - 11


வடதிசைப் பேரரசுகள்

தமிழகத்துக்கு வெளியே தென்னாட்டின் முதற்பேரரசுகள் கலிங்கப்பேரரசும் ஆந்திரப்பேரரசுமே. இவற்றுள் கலிங்கப்பேரரசு பழமையானது. ஆனால், அதன் பழமையெல்லை, ஆட்சியெல்லை, மரபு ஆகியவை பற்றி நமக்கு எதுவும் நேரடியாகத் தெரியவில்லை. அதன் வடபால் கங்கைவெளியில் குருபாஞ்சாலம், கோசலம், விதேகம் அல்லது மகதம், காம்போசம் ஆகிய அரசுகள் நிலவின. ஆரியர், பாரசீகர், யவனர், சகர், குஷாணர், ஊர் முதலியவர்கள் படையெடுப்பால் மேற்கு அரசுகள் தளர்ந்தன. விதேகம் அல்லது மகதம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக சிசுநாகர், நந்தர், மௌரியர், சுங்கர், கண்வர் ஆகிய மரபினரால் ஆளப்பட்டது.

நந்தர்கள் கலிங்கத்தை வென்று ஆண்டனரென்று அந்நாட்டின் காரவேலன் கால கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. தெற்கேயும் குந்தள நாட்டை அவர்கள் ஆண்டதாகப் பிற்காலக் கன்னடக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். அவர்கள் ஆட்சி அசோகன் ஆட்சி எல்லையளவிலே தெற்கே தமிழகஎல்லை வரை பரந்திருந்தது என்று கொள்ள இடமுண்டு.

நந்தர்கள் பெருஞ்செல்வத்தைப் பற்றிக் கடைச்சங்கப் புலவர் மாமூலனார் பாடியுள்ளார். மாமூலனார் நந்தர் காலம் அதாவது கி.மு.4-ஆம் நூற்றாண்டினர் என்று இதனால் கருத இடம் ஏற்படுகிறது.

மோரிய மரபின் பேரரசனான அசோகன் கி.மு. 260-ல் கலிங்கத்தின் மீது படையெடுத்தான். போரில் அவன் வெற்றி பெற்றாலும் அது பேரளவில் அழிவுப் போராயிருந்தது. கலிங்கர் பக்கம் நூறாயிரம் போர் வீரர் இறந்தனரென்றும் நூற்றைம் பதினாயிரம் வீரர் சிறைப்பட்டனர் என்றும் அறியப்படுகிறது. போரின் கடுமையும் அளவும் நோக்கி, கலிங்கம் ஒரு வலிமை வாய்ந்த அரசு மட்டுமல்ல, ஒரு பேரரசே என்று கொள்ளத்தகும். அதன் எல்லை அன்றே மைசூர் வரை பரவியிருந்தது என்று கூறல் தவறாகாது. ஏனெனில், இதுவே நந்தர் பேரரசாட்சியின் தென் எல்லை ஆகும். மோரியர் நந்தரை வென்றபோது கலிங்கர் தனியரசாகி, நந்தர் பேரரசின் தென் பகுதியைக் கைக்கொண்டிருந்தல் வேண்டும். கலிங்கத்தை வென்றபின் அவ்வெற்றியா-