உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 அப்பாத்துரையம் - 11

காணப்படும் கோவைக்குரிய பாட்டுடைத்தலைவன் என்று மறைமலையடிகளார் கருதுகின்றனர். இவனுக்குப்பின் வந்த செழியன்சேந்தன் கல்வெட்டுகளில் தன்னை வானவன் என்று குறிக்கிறான். இதிலிருந்து இவன் பாண்டி நாட்டை ஆண்டதுடன் சேரனையும் போரில் வென்றிருக்கக் கூடும் என்று கருதலாம். சேந்தன் திவாகரம் என்று குறிக்கப்படும் தமிழின் முதல் நிகண்டு இவன் காலத்திலேயே எழுதப்பட்டது.

இடைக்காலப் பாண்டியப் பேரரசை நிறுவியவன் என்று கூறத்தக்க பெரும் பாண்டியன் அரிகேசரி பராந்தகன். பெரிய சின்னமானூர்ச் செப்பேட்டில் குறிக்கப்படும் அரிகேசரி மாறவர்மன் இவனேயாவான். இவன் உள்நாட்டில் பரவரையும் குறுநாட்டு வேளிரையும் கீழடக்கினான். சேரனுக்கு எதிராகப் பல தடவை போரிட்டு அவனை அடக்கினான். சங்கரமங்கை என்ற போர்க்களத்தில் பல்லவரை வென்றான். அவன் வெற்றிகண்ட மற்றொரு போர்க்களம் செந்நிலம் ஆகும்.

திருஞானசம்பந்தரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட கூன்பாண்டியன் என்ற சுந்தரபாண்டியன் இவனே. இதனால் வாதாபி அழித்த பல்லவன் காலத்தை ஒட்டி இவன் வாழ்ந்தவன் என்று அறிகிறோம். இவன் ஆட்சி, 670 முதல் 710 வரை நடைபெற்றது. அடுத்த பேரரசன் கோச்சடையன் 740 வரை ஆண்டான். பெரிய சின்னமனூர் செப்பேட்டில் இவன் ஜடிலன் என்று குறிக்கப்படுகிறான். இவன் மருதூர்ப்போரில் ஆய்வேளை முறியடித்தான். வானவன். செம்பியன், சோழன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான் என்ற பெயர்கள் இவன் வெற்றிகளுக்குச் சான்றாகின்றன. தற்போது மங்களூர் என்றழைக்கப்படும் தென்கன்னட மாவட்டத்திலுள்ள மங்களாபுரத்தைத்தாக்கி வெற்றிகண்ட செய்தி செப்பேடுகளில் குறிக்கப்படுகிறது. கொங்கர்மீது இவன் ஆட்சி செலுத்தினான். ஆனால், கொங்குவெற்றி இன்னும் நிலையானதாகவில்லை.


பாண்டியப் பேரரசின் உச்சநிலை

மாறவர்மன் முதலாம் இராசசிம்மன் 740 முதல் 765 வரை ஆண்டான். நெடுவயல், குறுமடை, மண்ணைக்குறிச்சி, திருமங்கை, பூவளூர், கொடும்பாளூர் ஆகிய இடங்களில் இராசசிம்மனுக்குப்