உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

(225

அதுவே அவ்விரு மரபளாவிய இராமராயனின் அரவீட்டு மரபாயிற்று. புயலின் வண்ணமாமயிலாக ஆடி அதுவே புயல் கடந்த தூவான மண்டலத்திலும் வானவில்லாக எழிலொளி கான்று நிலவிற்று.

விசயநகர காலத்திய பாண்டிய அரசர்களைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் ஓர் அழகுரை வழங்கியுள்ளனர். தம் புலிப் பேரரசும் பொருட்பேரரசும் மறைந்த பின்னால்கூட அவர்கள் கவிப்பேரரசராகவும் அருட்பேரரசராகவும் விளங்கியிருந்தனர். புலமைசான்ற பாண்டியர் பலர் பாடல்களும் காவியங்களும் வாழ்க்கைச் செய்திகளும் இதனை மெய்ப்பிக்கின்றன. ஒரு பாண்டியன் விசயநகரப் பேரரசர்மீது கலம்பகமே பாடியதாக அறிகிறோம். அவனை நோக்கி ஒருபுலவர் "அரசராகிய நீர் அயலரசர்மீது கலம்பகம் பாடலாமா?" என்று கேட்டதற்கு அவன் மிடுக்குடன் “யாமும் மதிக்குலம், விசயநகர அரசருக்கு மதிக்குலம். யாம் அயலரசரைப் பாடவில்லையே" என்று பாடலிலேயே பதிலிறுத்தானாம்! பாண்டியரின் இந்தப் பண்போடொத்த மற்றொரு பண்புக் கூற்றினை அரவீட்டு மரபுக்குரிய விசயநகரப் பேரரசரிடம் காண்கிறோம். அவர்கள் பெயரளவிலேயே பேரரசராக நிலவினராயினும், அவர்களில் பலர் சிற்பிகளையும் மீகாமன்களையும் நினைவூட்டத்தக்க தனிப்பெரு வீரராகத் திகழ்ந்தனர். அத்துடன் ஆண்ட அரசர் மட்டுமன்றிப் பெருங்குடிகளில் கூட இராமராயனொத்த பெருவீரர் தோன்றியிருந்தனர். இத்தகையவர்களுள் யாசம நாயுடு என்ற பெருவீரனுக்குரிய வேலுகோடி மரபு தெலுங்கில் மக்கள் பாணியில் எழுதப் பட்ட வேலுகோட்டிவாரி வம்சாவளி' என்ற ஒரு வீரக்குடிக்குரிய பெருவீர காவியம் தோற்று வித்துள்ளது.

அரவீட்டு மரபுக்கு முற்பட்டப் பேரரசு பல தனி மண்டலங்களாக மட்டுமே பிரிவுற்றிருந்தது. ஆனால் புயலுக்குப் பிற்பட்ட நாட்களிலேயே 'பேரரசு மும்மொழி மாகாணங்களாக, மூன்று மொழி மண்டலத் தலைவர்களின் கீழ் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டது. அத்துடன், மதுரை, தஞ்சை, செஞ்சி முதலிய தமிழக நாயக மரபுகள் புதுத்தேசீயங்களாக வளரத் தொடங்கியதும் இந்நாட்களிலேயேயாகும்.