62
அப்பாத்துரையம் – 13
இம்மாய ஒற்றுமையின் முழுமறை திறவு தென்னக, விசய நகர வரலாறுகளிலேயே உள்ளது. நிலம் தமிழின நிலம். அதில் வித்திட்டுச் சென்றவர் முப்பால் முதல்வர் வள்ளுவர். ஆனால் அரை குறையாகப் பண்பட்ட நிலத்தில் உழுதவர்கள் இராமானுசருள்ளிட்ட தென்னகப் பேரறிஞர்.தேசீய அறிஞராகிய வித்தியாரணியரே அதில் மரமடித்து நீர்பாய்ச்சி விளைபுலங் காணப் பாடுபட்டவர். அவருக்குப்பின் முன்போல அது வயலிலும் வயல் கடந்தும் பசுமை பரப்பியுள்ளதானாலும், தேசிய அறிஞர் இன்னும் தோற்றா நிலையிலேயே, வயல் கடந்த புலத்தின் களையோடப் பெற்று முழுதும் மேனி காணாதிருக்கின்றது.
வைதிக இயக்கம்
தேசீய இயக்கத்தில் அரசியல் கிளர்ச்சி அவ்வியக்கத்துக்கு உருக்கொடுத்த எலும்பமைப்பு. வித்தியாரணியர் அதற்குத் துணையாக அமைத்த சமயங்கடந்த தேசீய அமைப்பு அவ் வெலும்புகளைப் பிணைத்து நிறுத்தும் தசை நார் மண்டலமாய் இயன்றது. ஆனால் வித்தியாரணியர் இதனுடன் அமைய வில்லை. எலும்புகளுக்கும் தசை மண்டலத்துக்கும் ஆதாரமான குருதியோட்டமாக, அவற்றைப் பிணைத்தியக்கும் நாடி நரம்பு மண்டலமாக அவர் தேசீய இயக்கத்தின் சமுதாய அமைப்புக்குத் திட்டமிட்டார். அவரது வைதிக இயக்கத்தின் ஒரு பெருங்கூறாக இது அமைந்தது.
தென்னகத்தில் அவர் காலத்துக்குள்ளாகவே தென் மொழி மூன்று பெரிய மொழிகளாக, தமிழ், தெலுங்கு, கன்னடமென்ற மூன்றாக வளர்ந்திருந்தது. அவர் காலத்திலிருந்து மலையாளம், துளு, குடகு முதலியனவும் கிளைத்துள்ளன. வடதிசைச் சிந்து கங்கை வெளியிலோ இன்றுள்ள தாய்மொழிகளே தெளிவாக உருவாகவில்லை. உருவாகா எண்ணற்ற பன்மொழி மண்டலங் களாக மராத்தி, வங்கம், இந்தி, பஞ்சாபி ஆகிய நால்வேறு குழு மொழிகளின் நான்கு பரப்புக்களடங்கிய அகல் பரப்பாக அது இயங்கி வந்தது. மொழியிலுள்ள இந்த வேறுபாடு நாகரிகப்படி, பழக்க வழக்கங்கள், சமய சமுதாய மரபுகள், கல்வி ஆகிய எல்லாத் துறைகளிலும் இருந்து வந்தன. விசயநகரப் பேரரசை மையமாகக் கொண்டு இப்பரப்பில் மக்கள் வாழ்வில் ஒற்றுமை உண்டு பண்ணுவதே வைதிக இயக்கத்தின் பெரு வேலையாயிற்று.