உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
186 ||

அப்பாத்துரையம் - 14



வையாவிக்கோ அல்லது வையாவிக் கோமான் என்றும், மக்கள் ஆவியர் என்றும் சுட்டப்பெற்றனர். அவர்கள் மலையின் பெயரான பொதினியே இன்று பழனி என மருவியுள்ளது, (பழம் நீ எனக் கூறப்படும் புராண மரபுக்கதை இனிதேயாயினும் அதனடியாகப் பழநி என வருவித்து எழுதுவது தவறு, மரபு மாறாட்டச் செயலும் ஆகும்). இவ்வேளிரின் நகரம் திருமுருகாற்றுப் படைக் கால முதல் திருப்புகழ்க் காலம் வரை இலக்கிய மரபில் திரு ஆவிநன்குடி (இதுவும் திருவாவினன் குடி என்று புராண மரபுக்கதைக் கியையத் திரித்தெழுதி வழங்குகிறது) என்றும், வையாபுரி, வைகாவூர் என்றும் புகழ்ப்பெயர்கள் பெற்றுள்ளன. இதனையடுத்துள்ள கோடை மலைத் தொடரில் வாழ்ந்த பண்ணன் என்ற வேள் தலைவன் பெயராலேயே அம் மலைத்தொடர் பண்ணிமலை (தவறான திருத்தம்: பன்றிமலை- சமக்கிருதத் திரிபு-வராகமலை ஆயிற்று என்று கருதப்படுகிறது.

இவ்வேளிர் ஆய்மரபினர்.பிற்காலத்தில் தெற்கு மேற்காகப் புடைபெயர்வுற்றுத் திருவாங்கூர் அரச மரபாக மலர்வுற்ற ஆய்வேள் மரபு இதுவாதல் கூடும் என்பது மேலே குறிக்கப்பட்டுள்ளது.

வையாவி நாட்டு வேளிருள் பெரும்புகழ் பெற்றவன் வையாவிக் கோப்பெரும்பேகன். படரக் கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தன் தேரையே அளித்த பாரியின் புகழ்போல, குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்குத் தன் போர்வையையே வழங்கிவிட்டு வந்தவன் என்று இவன் கொடைவண்மை புலவரால் புகழப்படுகிறது. இவன் துணைவி கண்ணகி சிலப்பதிகாரக் கண்ணகி போலவே கற்பிற் சிறந்தவள். பிறமகளிர் வயப்பட்டு அவளைப் புறக்கணித்து வந்த பேகனைச் சங்கப்புலவர் பலர் சென்றுபாடி அவள் துயர் களைய விரையும்படித் தூண்டினர்.

வையாவிக் கோமான் பதுமன் என்ற வேள் தன் புதல்வியர் ருவரை முறையே சேர மரபின் பல்யானை செல்கெழுகுட்டு வனுக்கும் கொங்குச் சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் மணஞ் செய்து கொடுத்தான். ஏற்கெனவே தாயாதி ன்பிறந்தாராயிருந்த அவர்கள் பாசம் இதனால் மேலும் நெருக்கமுடையதாயிற்று. அத்துடன் அதுவே கொங்குத் தமிழகம்