உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 187

கொங்குச் சேரர் பேரரசில் படிப்படியாக எளிதில் கரைவதற்கும் வழிவகுத்தது என்னலாம்.

தகடூர் நாட்டு அதியமான் பண்டைத் தென் கொங்கு நாடாகிய இன்றைய கொங்கு நாட்டில் ஆட்சி செய்த வேளிருள் தலைசிறந்தவன். அவன் நகரும் நாடும் ஒருங்கே தகடூர் எனப்பட்ட ன. தலைவர் அதியமான், அதிகைமான், அதியமான், அதியன் என்றும்; மக்கள் அதிகர், அதியர் என்றும்; நாடு அதிகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

அதியமானைப் பாடிய சங்கப்பாடல் ஒன்று, அவன் முன்னோரே வானவர் நாட்டிலிருந்து கரும்பைக் கொண்டு வந்து பயிராக்கியதாகக் கூறுகிறது. இதனைப் புராணக் கற்பனை சார்ந்த புனைந்துரை எனக் கருதுபவர் உண்டு. வானவர் நாடு என்ற பெயர் சீன நாட்டுக்கும் உண்டு. சேர நாட்டுக்கும் உரியது. ஆனால், இம்மரபுரையின் ஊன்றிய மெய்ம்மை ஒன்றே. ஏதோ ஒரு காட்டுத் தட்டையைப் பயிற்றுவைத்துக் கரும்பாக்கி, அதிலிருந்து சர்க்கரைத் தொழிலையும் கண்டவர் அதிகை நாட்டவர் அல்லது கொங்குத் தமிழகத்தவர் என்பதே அது. (உலகெங்கும் பெரிதும் கரும்புக்குப் பெயரின்றிச் சர்க்கரைப் பெயரே தமிழ்ப் பெயராக வழங்குவதனடிப்படையில், இது மேலே குறிக்கப்பட்டுள்ளது. கரும்பு-கரும்பயிர்-கரிசல் நாட்டுப் பயிர்; இந்தி: கன்னா; தமிழ்: கன்னல்-கரும்பு)

புன்னாட்டையும் படியூரையும் போலவே, இந்நாட்டின் மலைப் பகுதிகளிலும் நீலமணிக்கற்களும் தங்கமும் செல்வ வளங்களாகக் கிட்டின. மேலே சுட்டியபடி, மோரியர் காலத்தில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) அதியமான் எழினி என்பவன் கோசரால் வாட்டாறு, செல்லூர் போர்க்களங்களில் முறியடித்துக் கொல்லப்பட்டான்.

அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பவனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் வென்றதாகப் பதிற்றுப்பத்து கூறுகிறது. அவன் பசும்பூட்பாண்டியனுக்குப் படைத் தலைவனாகவும் உற்ற துணைவனாகவும் இருந்தான் என்றும் பாண்டியன் பகைவர்கள் இதனால் ஒன்றுபட்டு இணைந்து அவனை முறியடித்தனர் என்றும் பரணர் பாடுகிறார்.