உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 207

(

கூறுகிறது. இப் பரிசு செல்வக் கடுங்கோவின் வள்ளன்மையை மட்டுமன்றி அவன் போர் வெற்றி வளங்களையும் பேரரசின் விரிவையுமே சுட்டிக் காட்டுகின்றது. உண்மையில் ஒன்பதாம் பத்தில் இவன் பேரனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார் இவ் விருதிறப் பெருமிதமும் உளங்கொண்டே பேரனாகிய அப் பேரரசனின் போர்க்களத்தில் பகைவர்கள் விட்டுச் சென்றோடிய வாட்கள், விற்களின் எண்ணிக்கைக்கு இப்பேரரசன் கபிலனுக்கு வழங்கிய ஊர்களின் எண்ணிக்கையையே உவமையாக ஒப்பிட்டு, அவ்வூர்களின் எண்ணிக்கையை விட அவ் வேல்கள், வாள்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை மிகப் பெரியதாயிருந்தது என்று நாநயம்படக் கூறுகிறார்.

புலவர் பெருமான் கபிலர், இப்பேரரசனின் போர்களை விரித்துரைக்க வில்லையானாலும், ஏதோ ஒரு போரில் அல்லது போர்களில் அவன் சோழர், பாண்டியர் ஆகிய இரு பெரு வேந்தர்களையும் வென்றதாகக் கூறுகிறார். அத்துடன் அவன் வீரத்துக்கும் புகழ் ஒளிக்கும் கதிரவன் ஓரளவுக்குத்தான் ஒப்பாவான், முற்றிலும் ஒப்பாக மாட்டான் என்று நயத்திறம்பட வாதிடுகிறார். 'கதிரவன் பகலில் மட்டுமே வருகிறான், தோன்றி மறைகிறான், இரவெல்லாம் ஓய்வு கொள்கிறான்: ஆனால் செல்வக்கடுங்கோ ஓய்வதில்லை, மறைவதில்லை; அவன் புகழ் ஒளி வீசுவதன்றி ஒளிப்பதில்லை' என்று அவர் பாடுகிறார்.

செல்வக் கடுங்கோ வாழியாதனின் மூத்த கிளை வழித் தாயாதியான பல்யானைக் குட்டுவன் போர் வெற்றிகளிலெல்லாம், கடுங்கோ பெரும் பங்கு கொண்டிருந்தான் என்று கருத டமுண்டு. ஏனெனில் மாந்தை, தொண்டி என்ற மேல் கடற்கரைத் துறைமுகங்களை உள்ளடக்கிய பூழி நாட்டை, சேரர் சார்பில் பல்யானைக் குட்டுவன் கடம்பவேள் நன்னனிடமிருந்து கைப்பற்றியபின், அதைக் கொங்குப் பேரரசனிடமே ஒப் படைத்தான். (சேரருக்கு முசிறி போன்ற வேறு சிறந்த துறைமுகங்கள் இருந்ததாலேயே இவ்வாறு செய்தான் என்பர், அறிஞர் சீனி வேங்கடசாமி. பூழி நாடு துளுநாட்டுப் பகுதியன்று, சேர நாட்டுப் பகுதியென்றும் அவர் வாதிக்கிறார்). இதன்பின் செல்வக் கடுங்கோவும் அவன் பின்னோர்களும் ‘பூழியர்கோ’, ‘பூழியர் மெய்ம்மறை' என்று புலவர்களால் சிறப்பிக்கப் படுகின்றனர்.