உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 77

முடியாட்சிக் காலங்களில் ஆட்சிமரபு குறித்த சொற்களாக நீடிக்கவில்லை. முன்னது தொடக்கத்தில் ஒருதிணைக்கு உரிய மக்கட் பெயராகவும் (முல்லைநில ஆயர்), அதன்பின் ஒரு சாதிமரபு குறித்த பெயராகவும் (இடையர்) தேய்ந்து இழிபுற்றுக் குறுகிவிட்டது. பின்னதோ, வேளிர் என்ற அதன் பழைய பன்மை வடிவம் உட்பட, குடியரசுமரபு மறக்கப் பட்டபோதே ஆட்சி மரபும் பொருள் மரபும் இழந்துவிட்ட பழஞ்சொல்லாகிவிட்டது. ஆயினும், முடியரசுகள் இழந்துவிட்ட பழைய கோமரபுப் பண்புகள் பலவற்றையும் அவற்றின் பொது முறையான இலக்கிய வழக்காறுகள் இன்றும் குறித்துக் காட்டுகின்றன.

ஆய் என்ற சொல் தாய் அல்லது தந்தை, தலைவி அல்லது தலைவன், ஆசான், மேலாளர் (Master, Overlord) ஆகிய பொருள்களின் மூலம் ஆதிகாலப் பெண் இறைமை, பெண்வழி மரபு,பெண்ஆட்சி,பெண்டிர் சமயத்தலைமை, பெண்டிர்செல்வ உரிமை ஆகியவற்றையும், கோமரபுக்குரிய ஐங்குரவர் பண்பையும் சுட்டுகின்றது. இதன் விரிவாகத் தாயம் (ஒருபெண்டிர் விளையாட்டு, குடிவழி உரிமை) தாயாதி (ஒரு கோத்திரத் துட்பட்ட பங்காளி), தாயபாகம் (சொத்துப் பிரிவினை) ஆகிய சொற்கள் இன்னும் தொல்பழமரபு சுட்டுவனவாய் நிலவுகின்றன. இதுபோலவே வேள் (முருகன், மன்மதன், மணமகன், வீரமும் அழகும் இளமையும் ஒருங்கே கொண்டவன்) என்ற சொல்லும், அதன் விரிவுகளான வேள்வி (சமயவினைமுறை, வழிபாடு), வேட்டல் (வழிபட்டு நேர்ந்துகொள்ளல், விரும்புதல், மணம் புரிதல்; தெலுங்கு: பெள்ளி, மலையாளம்: வேளி - திருமணம்) ஆகியவையும் இறைமை, சமய ஆட்சி, அரசியல் ஆட்சி, சமுதாய ஆட்சி, நீதிமுறை ஆட்சி, பண்பாட்சி முதலிய கோமரபின் முழுநிறை ஆட்சிப்பண்பை உணர்த்துகின்றன.

கோ, ஆய், வேள் ஆகிய மூன்று சொற்களும் இவ்வாறு தமிழக, இந்திய, நாகரிக உலகத் தொல்பழமைக்கால அரசியல் வரலாற்றையே தம்முள் கொண்டியல்கின்றன. கோ (மலை,

தலைவன்) என்ற சொல் குடியரசு, முடியரசு ஆகிய இரண்டனுக்கும் உரிய பொது மூல அரசு மரபையும், அம் மரபின் குறிஞ்சித்திணை யூழியையும் குறித்துக் காட்டுகிறது. அதுமட்டுமன்று, வேளிரிணைவால் ஏற்பட்ட ஆதிமுடியரசு