உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

நெளிந்து வளையும் ஆராய்ச்சிப் போக்கு

103

இராவ்பகதூருக்கு இசைந்தபடி முந்திய நூலிலும், பெரியார் ஈ.வே.ரா. வுக்கு இசைந்தபடி பிந்திய நூலிலும் பேராசிரியர் போதிய அளவு வளைந்து, நெளிந்து கொடுத்திரு க்கிறார். ஏனெனில், ஆராய்ச்சித் துறையில் ஊடாடியவர் என்ற முறையில் இரண்டிலும் ஒரு சில பொதுக் கூறுகளை அவர் விட்டு வைத்திருந்தாலும், முடிவுகளும் நோக்கங்களும் பொறுத்த வகையில் இரண்டும் வேறுபட்டவை. தம் ஆராய்ச்சிகளின் போக்கை இரு வேறு இனச் சார்புகளுக்கு இசைய, இரு வேறு இனச்சார்பில் இருவேறு பண்புகளுடன் உழைத்த இருவேறு பெரியார்களின் ஒப்புதலும் ஆதரவும் பெறுவதற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் வகையில் பேராசிரியர் திறம் பெரிதே ஆகும்.இரண்டையும் எழுதியவர் ஒருவரேயானாலும், இருவேறு சட்டைகள் இரவல் தரப்பட்டு, இரு வேறு கட்சியாளர்களின் வழக்கறிஞராக அவர் செயலாற்றி யுள்ளார்.

புறக்கணிப்புக் குழுவின் உட்கருத்து

புறக்கணிப்புக் குழுவில் இராவ்பகதூரும் சரி, பேராசிரியரும் சரி சிலப்பதிகாரத்தைப் புறக்கணிக்கவே விரும்பினர்; தூற்ற விரும்பவில்லை. அது வரலாற்று நூலல்ல, கற்பனைநூல் என்று அவர்கள் நிலைநாட்ட விரும்பினர். ஏனெனில், பிற்காலத் தமிழ்க் காப்பியங்களான கம்பராமாயணமும், வில்லிப்புத்தூரார் பாரதமும், அவற்றுக்கு மூலமான சமற்கிருத பாரத இராமாயணங்களும் கற்பனை நூல்களே! அவற்றுக்கு இல்லாத சிறப்பு தமிழ்க்கும், தனித்தமிழ் நூல்களுக்கும் இருப்பது அவர்களுக்கு அல்லது அவர்கள் சார்பினர்க்கு உறுத்தியிருத்தல் வேண்டும். இரண்டாவது, சிலப்பதிகாரம் சங்ககாலத்து நூலன்று, அதாவது தனித் தமிழ்ப்பண்பு உலவிய காலத்து நூலன்று என்று அவர்கள் நிலைநாட்ட அரும்பாடுபட்டனர். ஆரியத் தமிழ்க் கலப்பு ஊடாடத் தொடங்கிய தேவாரத்துக்குப் பிற்பட்ட காலநூலே அஃது என்றும் விளக்க அவாவினர். இதுவும் இயல்பே. ஏனெனில், அவர்களால்கூட அது கம்பராமாயணத் துக்குப் பிற்பட்டது என்று கூறமுடியாமற் போய்விட்டது. ஆங்கில ஆட்சியின் மேலை வரலாற்று முறையும் அறிவாராய்ச்சி முறையும் இல்லாத காலங்களில் நம் வையாபுரி