உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(112

||__

-

அப்பாத்துரையம் 15

"எங்களுக்கு அழியாத சிலம்புச் செல்வத்தைக் கொடுத்த அடிகளே! நீர் யார், நீர் யார்?' என்று நாம் கேட்டுக்கொண்டே யிருக்கிறோம்! அவரோ, பதில் சொல்லாமல் புன்னகையுடன் 'குணவாயில் கோட்டத்தில்', எல்லையில்லாத அமைதியுடன் வீற்றிருக்கிறார்!” என்று அடிகள் பற்றி நாம் எதுவும் அறியமுடியா திருப்பது குறித்துத் தாம் அடைந்துள்ள ஆற்றாமையை அவர் எவ்வளவோ இலக்கிய நயம்பட சித்திரித்துக் காட்டியுள்ளார்.

இலக்கிய நயமும் கவிதை நயமும்தாம் காண வேண்டும், கால ஆராய்ச்சி அவ்வளவு தேவைப்படுவதன்று என்று மட்டுமே திருஆர்.கே.எஸ். கொண்டார். ஆனால், இராவ்பகதூர் வையாபுரி இன்னும் ஒருபடி மேற்சென்றுள்ளார். இலக்கிய நயமும், கவிநயமும் உணரக் கால ஆராய்ச்சி ஒரு தடையாய் இருக்கிறது என்று அவர் கருதியுள்ளார். தெய்வீகக் கவிநயங்களைக் காண வொட்டாமல் வழி மறைத்து மலைபோல் கிடக்கும் ஒரு மாடாகக் கருதிக் கால ஆராய்ச்சியை அவர் காய்கிறார். ஆயினும், தம் கோட்பாட்டுக்கு மாறாக அவர், தாமே தம் சிலப்பதிகார ஆராய்ச்சியின் ஒரு பெரும் பகுதியைக் கால ஆராய்ச்சிக்குத் தரத் தயங்கவில்லை.

கால ஆராய்ச்சி என்று இராவ்பகதூர் காய்வது கால ஆராய்ச்சியின் ஒரு புடைச் சார்பை மட்டுமே என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சிலம்பின் இலக்கிய நயத்தையும், கவிதை நயத்தையும் காணத் தடையாயிருக்கும் ஆராய்ச்சிச் ‘சனியன்’ சிலப்பதிகாரம் பிற்காலத்தது என்று வாதாடும் ஆராய்ச்சியன்று; அது சங்க காலத்தது, அது தனித் தமிழ்க் காலத்தது என்று வாதாடும் ஆராய்ச்சியே என்று அவர் கருதியிருத்தல் வேண்டும்.

ஆராய்ச்சி பற்றிய ஆராய்ச்சி

சிலப்பதிகாரக் கால ஆராய்ச்சி வெறும் கால ஆராய்ச்சி யன்று என்பதை இராவ்பகதூர் நன்கு அறிந்திருந்தார் என்றே கூறலாம். ஏனெனில், அது சங்க காலத்தது அன்று என்பதை ஏற்றுக்கொண்டால், அது வரலாற்று ஏடன்று என்று வாதிடத் தேவையேயில்லை, அது மட்டுமன்று. அதன் வரலாற்றுச் ச் செய்திகள் யாவும் கற்பனையைவிட மோசமான போலி வரலாற்றுக் கட்டுமானம் ஆகிவிடுதல் கண்கூடு. ஏனெனில்,