உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

உழக்கில் கிழக்கு மேற்கு

115

சமாஜப் பதிப்புக்காரர் திருக்குறள் உட்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்ககாலத்துக்குப் பிற்பட்டவையா யிருக்கக்கூடும் என்ற ஐயம் தெரிவித்து, அவற்றைத் தம் சங்க இலக்கியத் தொகுதியில் நோக்காததற்கு இதையும் ஒரு காரணமாகக் குறிக்கின்றனர். அந்நாளைய ஆராய்ச்சியாளர் பலர் கருத்து இஃது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐயத்துக்கிடமில்லாத சங்கத் தொகை நூல்களென்று சமாஜப் பதிப்பாளர் ஏற்றுக்கொண்டவை பத்துப்பாட்டும், எட்டுத் தொகையுமேயாகும். ஆனால், இவற்றிலும் இராவ்பகதூர் முற்காலத்தன, பிற்காலத்தன எனப் பகுத்தாய்ந்து காண்கிறார்.

உழக்கையே ஒழித்துவிட முடியாத நிலையில், உழக்கில் கிழக்கு மேற்காவது காண விரும்பும் முயற்சிகளே இவை.

பிற்காலத்தவை என்று சங்கப் பாடல்களில் சிலவற்றை அவர் குறிக்கக் காரணம் என்ன?

திருமுருகாற்றுப்படை போன்ற பத்துப்பாட்டிலடங்கிய பாடல்கள் சமயச் சார்பானவை: ஆகவே, அவை பிற்பட்டவை யாயிருத்தல் வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

ஆனால், இக் கருத்துகள் பிற்பட்டவை என்று அவர் கருதுவதற்கு ஆதாரம் என்னவெனில், அவை ‘பிற்பட்ட’ பாடல்களில் காணப்படுகின்றன என்று அவர் பதில் கூறுகிறார்.

நச்சுச் சுழல் வாதம்

இராவ்பகதூரின் வாதம் இங்கே நச்சுச் சுழல் வாதமாகிறது. ஏனெனில், முதல் வாத முடிவு இரண்டாம் வாத ஆதாரமாகிறது. அதே சமயம் இரண்டாம் வாத முடிவே முதல் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. இவ்வாறு ஆதார முடிவுகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆயினும், வாதம் இங்கே பிழைபட்டதானாலும் அஃது திறமையற்ற வாதம் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், அஃது ஆரியப் பண்பின் ஆர்வலர் களுக்கும் மனநிறைவு அளிக்கிறது. ஆரியப் பண்பை வெறுப்பவர் களுக்கும் மனநிறைவு அளிக்கிறது. ஆராய்ச்சி எவ்வளவு தவறானதாயினும் பிரச்சாரம் திறமை வாய்ந்ததாகியுள்ளது.