உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. இன்பத்தின் இயல்பு

இன்பம் எங்கே இருக்கிறது?

இன்பத்தைநாடாதவர் இல்லை. 'இன்பம் எங்கே இருக்கிறது?' என்று தேடாதவரும் கிடையாது. ஆனால், நாடிய இன்பம் கைவரப்பெற்றால், எவரும் அதில் மகிழ்ந்து நிறைவெய்தி விடுதலும் அரிது. அவர்கள் மேன்மேலும் இன்பமே, புதிய புதிய இன்பமே நாடுவர்.

'இன்பம் எங்கே இருக்கிறது!' என்ற கேள்வி முடிவுறாத கேள்வி மட்டுமன்று. முடிவுறக்கூடாத, முடிவுறத்தகாத கேள்வி என்றுகூடக் கூறலாம். ஏனெனில், இன்ப நாட்டமே உயிர். இன்ப நாட்டத்தின் ஆர்வமே உயிரின் இளமை, அதன் வளர்ச்சிப் பருவம். இன்ப நாட்டம் தளர்வுற நேர்ந்தால், உயிர் வளர்ச்சியும் தளர்வுறவே நேரும். இத்தளர்ச்சியே முதுமை. ஆனால், இந்த முதுமை உயிர்க்கு இயல்பானதல்ல. அது நீடிப்பதில்லை. உயிரின் உயிர்ப்பண்பு முதுமையை எட்டுமுன் உயிர் ஒரு புதிய உயிரை, வளர்ச்சிக்குரிய புதிய தலைமுறையின் உயிரைப் படைத்து விடுகிறது. வளர்ச்சி குன்றித் தளர்ந்த முதல் உயிரலையிலிருந்து தாவி, அது வளரவிருக்கும் புத்துயிரலைமேல் தவழ்கிறது.

நாடிய இன்பம் கைவரப்பெற்றவர் சிலர் ஒருசில நேரம் அதில் மகிழ்ந்திருக்கக்கூடும். ஆனால், அவர்கள் மகிழ்ச்சியின் அளவு அவர்கள் இன்ப நாட்டத்தின் அளவையே பொறுத்தது. எளிதில் பெற்ற இன்பம், எதிர்பாராது பெற்ற இன்பம் நீடித்த மகிழ்ச்சி அளிப்பதில்லை. அரிதிற் பெற்ற இன்பம், கடுமுயற்சியின் பின் பெற்ற இன்பம், அம்முயற்சி அருமையின் அளவில் மிகுதியான, நீடித்த இன்பம் தரத்தக்கதாகும்.

இன்பம், இன்ப நாட்டத்தில், இன்ப நாட்டமுடையவர் ஆர்வத்தில், முயற்சியிலேயே அடங்கியிருக்கிறது என்பதை இது