134
அப்பாத்துரையம் - 15
சுருக்கிக் கூறிவிட்டு, அவர்கள் தம் நூல் முழுவதும் இன்ப அலைகள் எழுப்பவே நாடினர். ஆனால், அப்பேரருளாளர்கள் வாழ்ந்த காலம் துன்ப அலைக்காலம். அவர்கள் சமுதாயம், இனம் முதுமையின் தளர்ச்சி தட்டிய காலம். ஆகவே, துன்ப அலைகளை எவ்வளவு அழகுபட அவர்களால் பாட முடிந்ததோ, அவ்வளவு அழகுபட, அவ்வளவு கிளர்ச்சியார் வத்துடன், இன்ப அலைகளை அவர்களால் எழுப்ப முடிய வில்லை. அதனாலேயே இன்ப கீதம் பாட வந்த அவர்கள் பாடல்கள் துடைக்க முடியாத துன்ப கீதங்களாகிவிட்டன. ஆயினும், அவர்கள் உள்ளார்ந்த இன்ப நோக்கே, இன்ப வலியுறுத்தே, அந்தத் துன்ப கீதத்துக்கும் ஓர் ஒப்பற்ற அழகு தந்து, அதைத் துன்பத்தில் ஆறுதல் அளிக்கவல்ல இனிய புலம்பல் பாக்கள் ஆக்கியுள்ளன.
துன்பத்தின் தளர்ச்சி தட்டிய தனி மனிதனுக்கு, சமுதாயத்துக்கு, இனத்துக்கு, அத்தளர்ச்சிக்குரிய அருமருந் தாவன இத்தகைய துன்ப கீதங்களல்ல, ஆறுதல் கீதங்கள் கூட அல்ல, இன்ப கீதங்களே.
‘உலகம் இன்பமயம்!’
‘வாழ்வு நிலையானது!’
‘வாழ்க்கை வாழ்வதற்கே!’
'முயற்சியும் சமூகத் தொண்டுமே
வாழ்வின் நிலையான இன்பம்!'
இவையே அத்தகைய அருமருந்தான இன்ப கீதங்கள்.!
தமிழகத்திலும் சரி, வடபுலத்திலும் சரி-இடைக்காலத் திலும், அணிமைக் காலத்திலும் நாம் துன்பகீதங்களையே தலைசிறந்த அறிஞர்களிடமும் பேரருளாளரிடமும் கூடக் கேட்கிறோம். ஆனால், நம்காலத்தில் நாம் இன்ப கீதத்தை எழுப்பி வருவதுபோலவே, தமிழ் சமற்கிருத இலக்கியத்தின் தொடக்க காலத்திலும் அறிஞர்கள், கவிஞர்கள், அறவோர்கள், அருளாளர்கள் இன்ப கீதங்கள், கிளர்ச்சிக் கீதங்கள் பாடினர்.
தமிழகம் மீண்டும் இளமை பெற்றுள்ள காலம் நம் காலம். நம் காலக் கவிஞர்களான பாரதி, பாரதிதாசன் ஆகியோர் பாடல்களில் நாம் மீண்டும் எழுச்சிக்கீதம் கேட்கத் தொடங்கி விட்டோம்.