உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. உயிரின் மறை திறவு

உயிரின் பண்பு யாது?

ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் உயிரின் பண்பைப் புலனறிவிலேயே கண்டார். உயிரின் வளர்ச்சியையும் அவர் புலனறிவின் வளர்ச்சியாகவே கொண்டார். ஓரறிவுயிரிலிருந்து ஐயறிவுயிர் கடந்து அவ்வளர்ச்சியைப் படிப்படியாகக் காட்டினார். அக அறிவாகிய பகுத்தறிவை அவர் ஆறாம் அறிவு என்று அழைத்தார். ஐயறிவுடன் இந்த ஆறாம் அறிவும் உடைய மனிதனோடு உயிரின் வளர்ச்சி முதிர்ச்சியுற்று முழுநிறைவு எய்துகிறதென்று அவர் கருதினார்.

உயிர்நூலார் உயிரின வகைகளின் தனிப்பண்பு வேறுபாடு களை. ஆராய்ந்து ஒப்பிட்டுப் பொது உயிர்க்கூறுகள் காண முயன்றுள்ளனர். ஆனால், தொடக்க உயிரினத்திலிருந்து வளர்ந்துவரும் அக வளர்ச்சியைத் தொல்காப்பியனார் கண்டவாறு அவர்கள் கருத்துச் செலுத்தினர்.

உயிர்ப்பு-மூச்சு உட்கொள்ளல், வெளியிடல்; உணவு- உண்பொருள் உட்கொள்ளல், செரிமானம் செய்தல், கழிவு நீக்கல்; குருதியோட்டம், குருதியின் வெப்பதட்ப நிலை; வளர்ச்சி, தளர்ச்சி; இனப்பெருக்கம் ஆகியவற்றை அவர்கள் உயிர்ப் பண்பின் கூறுகளாக விளக்கினர்.

தொல்காப்பியனார் கருத்துச் சென்ற வழியிலோ, உயிர் நூலார் கருத்துச்சென்ற வழியிலோ, சமயவாணர் கருத்து, பொதுவாகச் செல்லவில்லை. ஆனால், இரு சாராரும் கவனிக்காத ஒன்றை அவர்கள் முனைப்பாகச் சுட்டிக் காட்டினர். அதுவே பிறப்பு, இறப்பு என்ற உயிரின் தொடக்க இறுதி நிலைகளின் கூறு.