174 ||.
அப்பாத்துரையம் - 15
கட்டுரைத்துள்ளதாகத் தோற்றுகிறது. அது மட்டுமன்று. திருமந்திர ஆசிரியரான திருமூலரைப் போலவே, மற்றப் பற்றுகளை அகற்றவே இறைவனைப் பற்றற்ற கடவுளைப் பற்றுக என்றும் அவர் நயம் பட உரைத்துள்ளார்.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு'
கீழ்த்திசைச் சமயநூலார் அனைவரிடத்திலும் கீழ்த்திசை அறநூலார் அனைவரிடத்திலும் மட்டுமன்றித் திருவள்ளுவர் திருக்குறளிலும் காணப்படும் இந்த முரண்பாட்டின் விளக்கம் யாது?
சமயக் கருத்துகளை உய்த்துணர்வாகவும் ஒப்பீட்டு நெறியுடனும், திருக்குறளைத் திருக்குறளாசிரியரது வாழ்க்கைக் கோட்பாட்டின் பின்னணியுடனும் மொத்தமாகவும் காண்பவர் களுக்கு இம்முரண்பாட்டின் முழு விளக்கமும் மெல்லத் தென்படாமற் போகாது.
சமய நூல்களை, சிறப்பாகக் கீழ்த்திசைச் சமயநூல்களை நாம் பக்தி நூல்கள், அறிவு நூல்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம். சைவ, வைணவ அறிவு நூல்கள் (சித்தாந்தங்கள்) இவற்றின் இணைப்புப் பாலமாகும்.
புத்த, சமண சமயங்களுக்கு மறுபிறப்புக் கோட்பாடு அடிப்படைக்கோட்பாடு ஆகும். மற்றக் கீழ்த்திசைச் சமயங்களின் அறிவு நூல்களுக்கும் இது பொருந்தும் அவாவே. இவை யாவும் அவாவே பிறப்பிறப்புச் சூழலுக்கு விதை என்று கருதுகின்றன. அவா அற்றால் பிறவா வாழ்வு அல்லது பேரின்பம் பெறலாம் என்று அவை கொள்கின்றன.
கீழ்த்திசைப் பக்தி நூல்கள் யாவும் மேற்சொன்ன மறுபிறப்புக் கோட்பாட்டை ஏற்பவையே. ஆனால், மற்ற அவாக்கள் அல்லது பற்றுகளை ஒழிக்கக் கடவுட் பற்றை அவை வழியாகக் கொண்டன.
'தனக்கெனப் பற்றுக்கொள்ளாதே, கடவுளுக்காகப் பற்றுக்கொள்' என்று கூறுகிறது பகவத்கீதை.