8. பண்பும் பயனும்
உணர்ச்சி, அறிவு, மெய்யுணர்வு, மனத்திட்பம்!
உள்ளத்தின் நான்கு உணர்வுப்படிகள் என்று இவை கருதப்படுகின்றன. நான்கு படிகளின் தளமட்டத்தை அவை குறித்துக் காட்டுகின்றன என்பது உண்மையே. அவை முறையே கீழ் உயிரினப்படி, விலங்குப்படி, மனிதஇனப்படி, கடவுள்படி என்பன.
உணர்ச்சியை விலங்குப் படிக்கும், அறிவை மனிதப் படிக்கும் உரியதாகச் சிலர் கருதுவதுண்டு. இது முற்றிலும் சரியன்று. ஏனெனில், உணர்ச்சிப் படியின் தொடக்க நிலையில் உணர்ச்சி இயங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இயற்கையின் புற ஆற்றல்கள் அவ்வியற்கையின் அக ஆற்றலாகிய உயிரின் உடலாற்றலையே இயக்குகின்றது. உடல் இயற்கையால் இயக்கப்படும் இந்நிலையே உணர்ச்சியின் இயங்குநிலை ஆகும். ஆனால், கீழ் உயிரினப் படியிலேயே உணர்ச்சி இயக்கும் நிலையை அடைந்து உடலாற்றலை இயக்கத் தொடங்குகிறது. இயங்குதல், இயக்குதல் ஆகிய இந்த இரண்டு உணர்ச்சிப் படிகளின் பண்புகளே கொல்லப்படுதல், கொல்லுதல்; தின்னப்படுதல், தின்னுதல்; அஞ்சுதல், அச்சுறுத்தல் ஆகிய இரு திசைச் செயல்களாக விளங்குகின்றன.
அறிவுப் படியின் தொடக்கத்திலும் இதுபோல அறிவு இயங்கும் நிலையிலேயே உள்ளது. உணர்ச்சியே அதை இயக்குகிறது. கோபதாபங்கள், வன்மம், காழ்ப்பு, பகைமை ஆகியவை இத்தகைய அறிவுநிலை உணர்ச்சிகளே. இவற்றில் அறிவின் செயலால் உணர்ச்சி ஆற்றல் பெறுகிறது. ஆனால், அறிவு அடிமைப்பட்டு உணர்ச்சியின் தன் முனைப்புக்கு இடம் அளிக்கிறது. அறிவின் உயர்படியில் அறிவே உணர்ச்சிகளை இயக்குகிறது. ஆனால், தன்முனைப்பு இங்கே தற்பற்றாகி