இன்பத்துள் இன்பம்
183
முழுதும் பரவுகிறது. ஆனால், தொடக்க நிலையில்-இதுவே தற்போதைய உலக நிலை... உடற் பண்புக்கு உயிர் அடங்கி நடைபெறுகிறது. இன முதற் குழு இந்தப் படியில் இன நலத்துடன் குழு நலமும் பேணுகிறது. இனம் இதனால் அக்குழுவையும் உடற் கூறாகக் கருதித் தனித்து இயங்கவிடுகிறது. இயேசுபிரான், காந்தியடிகள் ஆகியோரின் வாழ்வில் இனம் அவர்கள் அருமை யுணராதுபோனதன் காரணம் இதுவே. இன முதற் குழுவின் மனிதப்படி கடந்து அவர்கள் கடவுள்படிக்கு உயர்ந்த நிலைக்கு இது சான்று. இனமுதற் குழுவும் மனித உணர்வும் முற்றிலும் இந்தப் படியை அடைந்தபின், அதுவே மனிதப்படி கடந்த தெய்வப்படி, மெய்யுணர்வுப்படி கடந்த மனத்திடப்படி ஆகிறது. இந்தப் படியை அமைத்தவரே பகவர். அவர்கள் உலகை இயக்கும் திறம்படைத்தவர் ஆகிறார்கள்.
இங்ஙனம் உயிர்முதலாக மனித இனம் கடந்த இன வளர்ச்சியில் உணர்ச்சியிலிருந்து அறிவும், அறிவிலிருந்து உணர்வு அல்லது மெய்யுணர்வும் மெய்யுணர்விலிருந்து உரம் அல்லது மனத்திட்பமும் படிப்படியாக வளர்ந்து உருப்பெறு கின்றன. ஆயினும், அவை முற்றிலும் வளர்ச்சிப்படிகள் அல்ல. அவை வளர்ச்சியின் நான்கு தளமட்டங்களைக் குறித்துக் காட்டும் பண்புகள் மட்டுமே. ஏனெனில், அவை ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியவை மட்டுமல்ல. ஒவ்வொரு பண்பும் அடுத்த பண்பைத் தோற்றுவித்தவுடன் ஓய்ந்து விடுவதில்லை. தொடர்ந்து ஒன்றருகே ஒன்றாக ஒருங்கிணைந்து அலைகளாக அவை இயங்குகின்றன. அத்துடன் அலையோடு அலை கலந்து பல்வேறு புதிய புதிய அலைகளைத் தோற்றுவிப்பதுபோல, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றை ஒன்று தூண்டிப் புதுப்புது உணர்ச்சி, அறிவு அலைகளாக வளர்கின்றன. உணர்ச்சியின் செயலால் அறிவுஅலை உயர் அறிவலைகளாக வும், அறிவின் செயலால் உணர்ச்சியலை உயர் உணர்ச்சியலை களாகவும், வளர்ந்து கொண்டே செல்கின்றன. இதனால் உணர்ச்சி, அறிவு முதலிய பண்புகளைப் படிகள் என்று கூறுவதை விட, பல படிகளையும் பல தளங்களாகக் கொண்டு பின்னிப் பிணைந்து வளர்ந்து செல்லும் அலைப்பின்னல்கள் என்று கூறலாம்.