உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

||- -

அப்பாத்துரையம் - 15

அவாவுக்கு மனநிறைவு அல்லது நிலைத்த நீடின்பம் என்ற ஒன்று அதன் இயல்பிலேயே, என்றும் இருக்க முடியாது. ஏனெனில், மனநிறைவு என்று ஏற்பட்டதோ, அன்றே அவா முற்றுப்பெற்றுவிடும். வளர்ச்சியுறாது; அதன் உயிர்ப்பண்பு ஓய்வுற்றழியும். மனநிறைவு தரும் அவா இங்ஙனம் அவாவுக்கு மாறான அல்லது அதனின்றும் அடிப்படையிலேயே வேறுபட்ட ஒரு பண்பு ஆகிறது. பொதுநல அவா அவாவின் உயிர்த்தன்மை யுடையதாயினும், அதன் நிறைவேற்றம் இத்தகைய அடிப்படை வேறுபட்ட பண்பு உடையது அன்று.

அவா நிறைவேற்றமும் ஏற்படாமல், அவாவிய உயிர் புத்தவாவிலும் ஈடுபடாமல் இருந்தால், உயிர் ஒரே அவாவால் நீடித்து இடையறாது முயல வேண்டும். இத்தகைய அவாவுக்கு உயிரவாவின் பண்புகளுள் ஒன்று வளர்ச்சி-இருக்கமுடியாது. அத்துடன் உயிரின் விடாமுயற்சிக்கு ஓர் எல்லையுண்டு. அதன் முயற்சியில் எப்படியும் தளர்ச்சி ஏற்படாமலிராது. முயற்சி தளராதவிடத்தும் ஆர்வம் தளராமலிராது. தளர்ச்சி ஓய்வுக்குக் கட்டாயம் வழி வகுக்கும். அவா நிறைவேறுமென்ற நம்பிக்கை கெடுமளவு ஆர்வக்கேடு ஏற்பட்டால், அதுவே, ஏக்கம், மனக்கசப்பு, மனமுறிவு, ஏமாற்றம்! அந்நிலையே அவாஅழிவு, உள்ளத்தின் அழிவு, உயிரழிவு ஆகும்.

தன்னல அவாவில் எதுவும் இங்ஙனம் நீடித்து உயிர் அவாவாக, நிலையான வளர்ச்சியுடைய அவாவாக உலவ முடியாது என்று காண்கிறோம். ஆனால், இன உணர்வு ஏற்பட்டபின் பொதுநல அவாவுக்கு இப்பண்புகள் யாவும் உண்டு. பொதுநல அவாவில் முயல்பவனது ஆர்வம் தோல்விகளால் சோர்வுறமாட்டாது; வெற்றி கிட்டும்வரை அது தளர்வுறாது; தோல்விகள் முயற்சியின் அருமையையே பெருக்கி ஆர்வம் வளர்ப்பது உறுதி. இது மட்டுமன்று. வெற்றியில் ஏற்படும் அதே மனநிறைவு தோல்வியிலும் ஏற்படும். பொதுநல அவா எல்லையற்ற பரப்புடையதாதலால், வெற்றியிலோ தோல்வியிலோ ஏற்படும் இம்மனநிறைவு அவாவின் உயிர்வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பதில்லை. அஃது இன எல்லையளாவி, பேரின எல்லை நாடி, கால இடம் கடந்து விரிந்து கொண்டே செல்கிறது.