உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துள் இன்பம்

217

இன்பம் என்பது உண்மையில் நுகர்பவனுக்கும் நுகர்பொருளுக்கும் உள்ள தொடர்பு அன்று. நுகர்பவனுக்கும் சமுதாயம் அல்லது இனத்துக்கும் உள்ள தொடர்பேயாகும். பெரும்பாலும் சமுதாயத்தில் புகழ் அல்லது மதிப்பு, குடும்பத்தில் அன்பு ஆகிய மூவகைப்பட்ட உணர்ச்சியே இன்பங்கள் எல்லாவற்றின் அடிப்படை ஆகும். துறவோரும் அருளாளரும் குடும்பத்தில் உள்ள அன்பையே சமுதாயத்திலும் நாடுவர்- அவர்களுக்குச் சமுதாயமே, இனமே குடும்பமாய் அமைவதன் காரணம் இதுவே. நுகர் பொருள்களும் இன்பக் கருவிகளும் எப்போதும் இன்பம் அளிக்காததற்கும் நிலையான, இடையறா வளர்ச்சியுடைய உயிர் இன்பம் அளிக்காததற்கும் கூட விளக்கம் இதுவே.

இன்பத்தில் மெய்யுருவம் தனி மனிதனிடத்தில் முதலில் குடும்பப் பாச ஆர்வமாகவும், பின் சமுதாய மதிப்பார்வமாகவும், அன்பார்வமாகவும், அதன் பின் இனத்தின் மதிப்பார்வம், அன்பார்வம் ஆகிய புகழின் அவாவாகவும் செயலாற்றுகிறது. இவை படிப்படியாக உயர்ந்த பண்பளாவி, மக்கள், இன அன்புப் புகழார்வமாக மிளிர்கின்றன. ஆனால், வள்ளுவர் குறிக்கொண்ட புகழார்வம் இன்னும் உச்ச உயர்படிகள் காண்கின்றது. குடும்பம், சமுதாயம், இனம் ஆகியவற்றின் அன்பைக்கூட வள்ளுவர் பாராட்டிய அருளாளர் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் சமுதாயத்தினிடமும் இனத்தினிடமும் தாம் கொண்ட வரம்பிலா அன்பினாலேயே செயலாற்றுகின்றனர். சமுதாயமும் இனமும் அதையறிந்து அவரை மதிக்கலாம், போற்றலாம், அன்பு காட்டலாம்; அதை அறியாமல் இருக்கலாம், புறக்கணிக்கலாம்; அவர் அன்பறியாது அவமதிக்கவோ, தூற்றவோ, வெறுக்கவோ கூடச் செய்யலாம். தம் அன்பு காரணமாக, தாம் நலம் செய்த உணர்வு ஒன்றே அவர்களுக்குப் போதிய தூண்டுதலும் பரிசும் ஆகும். இத்தகைய தகுதியையே வள்ளுவர் புகழ் என்கிறார். வானம் வழங்குவதுபோல, கைம்மாறு கருதாத இத்தகைய அருட்பண்புடையாரையே வள்ளுவர் ஒழுக்கத்து நீத்தார், அந்தணர், பகவர் எனச் சிறப்பித்தார். அவர்கள் இன்பம் கலப்பற்ற இன்பம், அழிவில் இன்பம், என்றும் வளரும் இன்பம். ஏனெனில் அஃது அவர்கள் தோல்வியிலும் மாள்விலும், வெற்றியிலும் வாழ்விலும் ஒருங்கே இன்பம் பயப்பது. இனவாழ்வுடன் ஒன்று பட்ட இன்பமாக அது நிலவுவது ஆகும்.