இன்பத்துள் இன்பம்
239
இனத்திலும் சென்று பெருகவல்ல செறிவான முழுநிறை படியாகவும் இயங்குகின்றது.
குடும்பவாழ்வு இங்ஙனம் இனவாழ்வின் கருமூலம் மட்டுமன்று, முதற்படி மட்டுமன்று; அதன் முழுநிறை பண்பும் ஒருங்கே செறிந்த விதை அதுவே. இதை அறிந்த பண்பட்ட இனம் தமிழினம். இதை வகுத்துணர்த்தி விளக்கிய முதல்வர் திருவள்ளுவர். அவர்தம் திருக்குறள் ஏட்டை இல்லறத்தில் தொடங்கி இன்பப்பாலின் கற்பியலில் கொண்டு முடிக்கும் அருந்திறத்தின் அடிப்படைப் பண்பு இதுவே. உணர்ச்சி யடிப்படையான ஆணின் அவாக்கூற்றாகத் தொடங்கிய இன்பத்துப்பால் இருபாலார்க்குமுரிய கூடலவாவி னூடாகப் பரவிப் பெண்ணின் ஊடற்கூற்றாகவே முடிவில் நின்றுவிடுவது கூர்ந்து நோக்கத் தக்கது. தலைமுறைக்குத் தலைமுறை நீடிக்கும் தொடர்பு பெண் மூலமாகவே நிகழ்தல்போல, உயிரினத்தின் ஒரு முழுமலர்ச்சி ஊழிக்கும், மற்றொரு முழு மலர்ச்சி ஊழிக்கும் இடைப்பட்ட தொடர்பும் அதே பெண்மையாகவே நிலவுகிறது. அச்சந்திப்பின் சின்னமே கூடலிடையேயும் நிகழும் பெண்மையின் ஊடல். திருவள்ளுவர் இது கண்டுணர்ந்து இறவா, பிறவா இன்ப அலைமுகட்டில் ஏடு தொடங்கி, மற்றோர் அலை முகட்டில்-கூடலின்பத்தை முடிவில் இன்பமாக்கும் ஊடலில் நம்மைக் கொண்டுவிட்டு அடுத்த ஊழியை நோக்கிச் செல்கிறார்.
பிறப்பிறப்புக் கடந்து, ஊழூழி கடந்து நம்மை இட்டுச் செல்லும் ஆற்றல் வாய்ந்த உலவா இன்பக்கொடி உயர்த்தி, குடும்பப் பண்பு என்னும் கோபுர வாயிற்படியிற் புகுந்து சென்று நாம் எல்லையற்ற இனவாழ்வு என்னும் எழில் மாடம் ஏறுவோமாக! அதில் மேன்மேலும் இன்பத்துள் இன்பம் நாடுவோமாக! ஒவ்வொரு நொடியிலும் பெற்ற இன்பம் அரும்பாக, போதாகப் பெறவிருக்கும் இன்பங்கள் அதனின்று மேன்மேலும் எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் நாள்மலர்களாக, மலர்க்கொத்துகளாக நம்மீது பொழிய, நாம் உயர் இன்பத்தின் ஓய்விலா ஒழுக்குடைய மெல்லருவியில் குளித்துத் திளைப்போமாக.
ன்