உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15. வாழ்வின்பம்

யானை கண்ட குருடர் கதை யாவரும் அறிந்ததே. அதை முழுமையாகக் காண எவர்க்கும் கண்பார்வை இல்லை. ஒருவன் உடலைத் தடவி அது கருங்கற் பாறை போன்றது என்றான். ஒருவன் கால் தடவி அஃது உரல் போன்றது என்றான். தும்பிக்கை தடவி ஒருவன் மலைப்பாம்பு போன்றதென்றும், காது தடவி மற்றொருவன் முறம் போன்றதென்றும் கூறினான்.

குருடராவது உறுப்பு உறுப்பாகப் பொருளை வேறு வேறு பிரித்து வேறு வேறாகக் கண்டனர். கூறு கூறாக, பண்பு பண்பாகப் பிரித்தறிபவரும் உண்டு.

ஒரு நகரைப் பலர் துருவிக் காண்பதாக வைத்துக் கொள்வோம்.

ஒருவன் பாரிய கட்டடங்களை ஏறி இறங்கிக் காண்கிறான். ஒருவன் தெரு ஒழுங்கினையும், கட்டட ஒழுங்கினையும் கண்டு அதன் அமைப்பில் கருத்துச் செலுத்துகிறான். ஒருவன் அதில் வாழும் மக்களை, ஒருவன் அவர்கள் பண்புகளை, மற்றொருவன் அதன் மக்கள் வாழ்வுக்கேற்ற நீர், உணவு முதலிய வாய்ப்புக்கான திட்டங்களை நோக்குகிறான். ஒருவன் அதன் வரலாறு, ஆட்சிமுறை உசாவியுணர்கிறான். கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் பற்றி ஆராய்கிறான் மற்றொருவன்.

ஒரே நகர்பற்றிய அவர்கள் அறிவு விளக்கம் ஒரே படியாக இருப்பதில்லை, ஆயினும் அவை முழுமையாக அந்நகர் பற்றிய விளக்கங்களே. அதே சமயம் விளக்கங்கள் முழுதும் நகரின் தன்மையைமட்டும் பொறுத்தவையன்று. காணும் ஆளின் தன்மையையும் பேரளவு பொறுத்தவை.

வாழ்க்கையைப் பற்றிய மனிதர் அனுபவமும் அறிவும் இதுபோன்றதே. அவை அவர்கள் தனித்தனிப் பண்பையும்