(232
அப்பாத்துரையம் - 16
அவன் ஊட்டிய ஆட்சித்திறம், அவன் எழுப்பிய அரசியல் சூழ்ச்சிநய மரபு ஆகியவையும் பேரரசின் தொடர்ந்த வீர மரபுக்கும், ஆட்சி மரபுக்கும் காரணமாய் இருந்தன. இவற்றில் அவனுக்கு இணையான இன்னொரு பெருஞ் சோழனைக் கூறுவதனால், அது முதலாம் குலோத்துங்கனேயாகும். ஏனெனில் பேரரசை வானளாவ வளரும்படி விசையுடன் உந்தித் தள்ளிய பெருமை இராசராசனுடையதென்றால், அது சரிந்து விழாதபடி விசையுடன் தடுத்தாட்கொண்ட பெருமை கட்டாயம் குலோத்துங்கனுக்குரியது. முதல் திறத்தில் இராசராசன் உலக வரலாற்றிலேயே ஒப்புயர்வற்றவன் என்றால், இரண்டாம் திறத்தில் அதுபோலவே உலக வரலாற்றில் குலோத்துங்கன் ஒப்புயர்வற்றவன் ஆவான்.
இருவரின் ஒப்புமையையும் இன்னும் ஒரு திசையில் காணலாம், பேரரசில் நேராட்சி எல்லை கடந்த பெரும்பகுதி களை மண்டலங்களாக்கியது. அதன் சிற்றெல்லையிலுள்ள ஊர்களை அடுத்த பேரெல்லையுடன் தொடர்பு படுத்தி இணைக்க 'வளநாடு' என்ற புதுப்பிரிவை ஆக்கியது, வரி விதிப்புக் குரிய திட்டமும், வரி அல்லது அரசாங்க வருமானத்தையும் அதற்கீடான மக்கள் வருமான வளர்ச்சியையும் ஒப்பிட்டுக் காண்பதற்குரிய திட்டமும் செய்தது ஆகிய இராசராசன் செயலே பிரிட்டிஷ் ஆட்சிவரையும் கீழ் திசை அறிந்த ஆட்சிப் பெருஞ்செயல்களாகும். குலோத்துங்கன் இவற்றைப் பின்பற்றியவன் மட்டுமல்ல. இதுபோன்ற திட்டத்தை அவன் தமிழ் இலக்கியத்தில் ஊக்கினான். புவிச் சக்கரவர்த்தியைப் பாடும் கவிச் சக்கரவர்த்திகள் அவன் காலமுதல்தான் தொடுத்துச் சில தலைமுறைகள் இருந்தார்கள். கம்பர்கூட உண்மையில் அக்காலத்திலேயேஇருந்திருந்தவராதல் கூடும். ஆனால், தமிழகப் புவிச் சக்கரவர்த்திகளைப் பாடிய தமிழ்ச் சக்கரவர்த்திகள் முற்றிலும் முதற் குலோத்துங்கன் மரபினர் காலத்தில் வாழ்ந்தவர்களே,
இராசராசன் வரலாறாக சமஸ்கிருதத்தில் ஒரு காப்பிய ஏடும், தமிழில் ஒரு நாடகமும் அவன் காலத்திலேயே இருந்ததாக அறிகிறோம். பேரரசன் கண் காண யாக்கப்பட்ட தமிழகப் பேரரசு வரலாறுகள் நமக்கு வந்து கிட்டாமற் போனது நம் துரதிருஷ்டமே.