உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

அப்பாத்துரையம் - 16

ஏற்கச் செய்வதன் மூலம் பாண்டியர் மரபை நிலையாகச் சோழரின் கிளைமரபாக்க இராசேந்திரன் எண்ணினான்.

சோழ பாண்டியர் அரசிருக்கைக்காகவும், விழாவுக்காகவும் இராசேந்திரன் மதுரைமாநகரில் மிகப் பாரிய அளவில் ஒரு மணி மாடமாளிகை கட்ட ஏற்பாடு செய்தான். அதன் பாரத்தால் பாரே அதிர்ந்ததென்று கல்வெட்டுக்கள் அதைப் பார்த்துப் புகழ்கின்றன. அது கட்டி முடிந்ததும் இராசேந்திரன் 1018-ல் தன் மகனுக்குச் சடையவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன் என்ற பட்டமளிக்கும் விழாவைப் பேராரவாரத்துடன் மதுரையில் நடத்தினான்.

அடுத்த ஆண்டில் சேர நாட்டையும் சோழ பாண்டியன் வசமே ஒப்படைத்துவிட இராசேந்திரன் எண்ணினான். சேர நாட்டு ஆட்சி மரபுக்குரிய முடியும் சின்னங்களும் பரசுராமனால் சாந்திமத் தீவுகளில் ஒரு வெல்ல முடியாத கோட்டையில் வைத்துக் காக்கப்பட்டன என்று அந்நாளில் கூறப்பட்டது. இராசேந்திரன் சாந்திமத் தீவைக் கைப்பற்றி அதிலுள்ள சேரர் முடியையும் மாலையையும் கைக்கொண்டான்.

எறிபடைக் கேரளன் முறைமையில் சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியும்,

செங்கதிர் மாலையும், சங்கு அதிர் வேலைத் தொல் பெருங்காவல் பல் பழந்தீவும்,

செருவில் சினவி இருபத் தொருகால்

அரசுகளை கட்ட பரசுராமன்

மேவருஞ் சாந்திமத் தீவு அரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்

என்று மெய்க்கீர்த்தியடிகள் இவற்றைக் குறிக்கின்றன.

இங்கே பல் பழந்தீவு வேறாகவும், சாந்திமத் தீவு வேறாகவும், சேரர் முடி வேறாகவும், பரசுராமன் வைத்த செம்பொன் முடி வேறாகவுமே குறிக்கப்பட்டுள்ளன.

பல்பழந்தீவு என்பதை இலக்கத் தீவக்கூட்டம் என்று கொள்வார் திரு சீவெல், சாந்திமத் தீவு அராபிக்கடலிலிருந்த ஒரு தீவாதல் வேண்டும் என்பர் அறிஞர் பண்டாரத்தார்.