உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தமிழ்ப் பண்பில் குடியாட்சி

அரசியல், சமுதாயம், பொருளியல், சமயம், குடும்ப வாழ்வு, கலை, இலக்கியம், அறிவியல் - இவை இன்றைய உலக வாழ்விலும் பல இனங்களின் வாழ்விலும் வரலாற்றில் தனித்தனித் துறை களாகவே காணப்படுகின்றன. இதுவே இயல்பு என்றும் பலர் கருதுவர். ஆனால், இவை மனித உலகின் பல கிளையின் வாழ்வுகளில் பெரிதும் தொடர்பற்றவையாகக் காணப்பட்டாலும் மனிதப் பேரின வளர்ச்சியில் ஒரே பண்பின் கிளை மலர்ச்சிகளே யாகும். நாகரிக மனித சமுதாயத் தின் வேர் முதலான தமிழினப் பண்பாட்டு வரலாறு இதனைத் தெளிவாகக் காட்ட வல்லது.

தமிழரிடையே - சிறப்பாகத் தொல் பழங்கால நாகரிகத் தமிழரிடையே மேற் குறிப்பிட்ட அரசியல், சமுதாயம், பொரு ளியல், சமயம், குடும்ப வாழ்வு, கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய எல்லாத் துறைகளும் ஒரே அடிப்படைப் பண்பின் பல திசை மலர்ச்சிகளாகவே காணப்படுகின்றன. இவ்வுண்மை உலக வரலாற்றில் பல புதிர்களுக்கு விளக்கமும் தரவல்லது.

வருங்கால உலகும் வருங்காலத் தமிழகமும் வள்ளுவர் திருக்குறளில் காணவேண்டும் முழுநிறை வாழ்க்கை விளக்கம் இதுவே.

உலக வரலாற்றின் ஒரு புதிர்

உலகில் முடியாட்சி முந்தியதா, குடியாட்சி முந்தியதா? இத்தகைய ஒரு வினா எழுப்பப்பட்டால், முடியாட்சி முந்தியது என்றுதான் மிக்கபலர் விடை கூறுவார்கள். வரலாறு இந்த விடைக்கு ஆதரவும் தாராது, எதிர்ப்பும் தாராது. ஏனெனில், பண்டைநாகரிகங்களின் வரலாறு எந்த விடையையும் தடுமாற்றம் அடைவிக்கவே செய்யும்.