உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழ் நாட்டின் இயற்கை வளம்

உலகின் பல மொழிகளுக்கும் நாடுகளுக்கும் பெயரும் உருவும் எல்லையும் பண்பும் உருவாவதற்குப் பல்லாயிர ஆண்டுகட்கு முற்பட்டே தமிழ் என்ற திருந்திய மொழியும், தமிழகம் என்ற நாடும், மொழி நாடு சார்ந்த எல்லைப் பிரிவுகளும், நாகரிகமும், பண்பாடும் அமையப்பெற்ற இனம் தமிழினம். ஆனால், முத்திசைக் கடல் சூழ்ந்த அதன் பண்டைப் பரப்புக் கடல்கோளால் தெற்கிலும், அயலினக் கலப்பால் வடக்கிலும் மேற்கிலும் சென்ற ஆயிர ஆண்டுகளுக்கு முன்பே குறுகிற்று. வெள்ளையர் ஆட்சியிலும், அதன் மரபில் வந்துள்ள இந்தியர் ஆட்சியிலும் அது தன் தனி உருவும் தனித் தன்மையும் தனி உரிமையும் இழந்துள்ளது. இந் நிலையிலும் இழந்த உரிமைத் தமிழகத்தை மொழிவழி எல்லையிலேனும் பெற நாம் இன்று அவாவுகிறோம்; கனவு காண்கிறோம்.

நாம் அவாவும் தமிழகம் நம் அவாவும் நாடாத இயற்கை வளம் உடையது. ஆனால், அதன் இன்றைய நிலை பண்புடைய அயலவரும் கண்டு பரிவுறும் நிலை ஆகும்.

இன்றைய தமிழ்நாடு இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ் பேசுவோர் ஒருங்குறையும் தென்கிழக்குப் பகுதியேயாகும். இது பண்டைத் தமிழகம்போல முத்திசைக் கடலெல்லை கொண்ட தன்று. இரு திசைக் கடல் எல்லையும் இருதிசை நில எல்லையும் கொண்டது. கிழக்கேயும் தெற்கேயும் பழவேற்காட்டு ஏரிமுதல் கன்னியாகுமரி வரை வங்கக் குடாக் கடலும் மன்னார் குடாவும் எல்லைகள். வடக்கே தெலுங்கு கன்னடப் பகுதிகள் பழவேற்காட்டு ஏரிமுதல் நீலகிரிவரை எல்லையாகின்றன.மேற்கே அரபிக்கடல்,மேற்குமலைத் தொடர், மலையாளம் பேசும் பகுதிகள் ஆகியவை ஆங்காங்கே எல்லையாகின்றன.