உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அப்பாத்துரையம் - 19

இதனைப் பாடிய புலவர் பெயர் செயங்கொண்டார். அவர் முதலாம் குலோத்துங்க சோழனிடம் அவைப்புலவராய் இருந்தவர். கலிங்க வெற்றியின் பின், அரசன் செயங்கொண்டான் என்ற பட்டத்தை மேற்கொண்டான். அந்த வெற்றிக் களிப்பால், செயங்கொண்டானைப் பார்த்து, 'செயங்கொண்ட புலவர் பெருமானே இப்போது நானும் செயங்கொண்டானாகி விட்டேன்' என்றானாம்! உடனே புலவர், 'அப்படியானால், அந்தச் செயங்கொண்டான் வீரவெற்றியைப் பற்றி இந்தச் செயங்கொண்டான் கவிதை வெற்றிப் பரணி பாடும்!' என்று கூறிச் சென்றாராம்.

ஒரு நாளைக்குள் கலிங்கத்துப் பரணியைப் பாடி முடித்து, புலவர் அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது.

அதற்கேற்ப, தமிழில் எந்த நூலிலும் காணாத குதிரைப் பாய்ச்சல் நடையை நாம் இதில் காண்கிறோம். நாலுகால் பாய்ச்சல், இரண்டுகால் பாய்ச்சல், தாளநடை, துரிதநடை, வெற்றிஎக்களிப்புநடை, கும்மாளநடை ஆகிய குதிரைப் பாய்ச்சலின் எல்லா வகைகளையும் இதன் கவிதை நடையில்

காணலாம்.

காதல் சுவையும் அக்கால நிலைக்கேற்ப இதில் மிகுதி, குலோத்துங்கன் காலத் தமிழகத்தில் எல்லா நாட்டுச் செல்வமும் வந்து குவிந்து கிடந்தது போல, அவன் அந்தப்புரத்திலும் எல்லா நாட்டிலுள்ள, எல்லா மொழி பேசும் அழகு நங்கையரும் இருந்தனர்.

முதல் பாட்டிலேயே இந்த வீர, காதல் இணைப்பு திறம்பட கையாளப்படுகிறது.

“காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைத்த

களிநல் மடவீர்! - கழல்சென்னி

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைத்த

களப்போர் பாடத் – திறமினோ!”

காஞ்சி என்பது பொன்மலைக்கும் காஞ்சி நகர்க்கும் பெயர். கலிங்கம் அதுபோல ஆடைக்கும் கலிங்க நாட்டுக்கும் பெயர்.

இதை வைத்து அழகுச் சிலேடை அமைக்கிறார் கவிஞர்!