உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

அப்பாத்துரையம் - 22

சிறுவனுக்கும் உறக்கம் இமைகளை நாடவே இல்லை. அவன் கெஞ்சிக்காக மனமாழ்கி வருந்தினான்.

ஆயினும் அவனுக்காக மீண்டும் மீண்டும் தமக்கையிடம் சென்று வருவதைப் பலரும் கவனிக்க நேரும் என்று அவன் அஞ்சினான். உண்மையில் இச்சமயம் மனையில் எல்லாருமே ஆழ்ந்த துயிலில் தம்மை மறந்திருந்தனர். கெஞ்சி மட்டுமே இரவின் கருமையினும் திண்ணிய துயரின் கருந்திரையில் தோய்ந்து மனமாழ்கினான். அணங்கின் புரியமுடியாத புதிய முடிவையும் அதன் பயனான அவளது முரட்டுப் பிடிவாதத் தையும் நினைத்து நினைத்து அவன் சீறினான். ஆனாலும், எதனாலும் வெல்ல முடியாத அவள் துணிவாற்றலை இந்நேரத்திலும் அவனால் மதித்துப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.

இறுதியில், விழித்திருந்து விழித்திருந்து அவன் அலுத்தான். இனி செய்யத்தக்கது எதுவுமில்லை என்று உள்ளம் ஓய்ந்தது. ஆனால், ஒரு கணத்தில் அவனிடம் ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டது. அவன் திடுமெனச் சிறுவன் கையைப் பற்றிக் காதில் ஓதினான். ‘அவள் இருக்குமிடத்திற்கு என்னை இட்டுக் கொண்டு போ.நான் நேராகவே பார்க்கிறேன்' என்றான். பையன் தலையாட்டினான். 'இதுமுடியாத உள்ளிருந்து தாழிடப்பட்டிருக்கிறது. அத்துடன் உள்ளேயும் வேறு பலர் ருக்கிறார்கள். உங்களுடன் இந்நிலையில் வர எனக்கு அச்சமாயிருக்கிறது' என்றான்.

காரியம்.

கதவு

கெஞ்சியின் மனம் இறுதியாக உள்ளூர இடிவுற்றது. 'சரி, அப்படியே ஆகட்டும். ஆனால் யார் என்னைக் கை விட்டாலும் நீ மட்டும் என்னை விட்டு விடாதே' என்றான். பையன் ஆர்வத்துடன் அவன் கையை அணைத்துக் கொண்டான். கெஞ்சி அக்கைகளால் அவனையே தன்னருகில் இழுத்துக் கிடத்தி அணைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். அழகொளியும் புகழொளியும் மிக்க இளவரசனுடன் துயிலும் வாய்ப்பில் மகிழ்ந்து சிறுவன் அகமெங்கும் புல்லரித்தது. நெகிழாத தமக்கையின் இதயத்தைப் பார்க்கிலும் நெகிழ்ந்து குழைந்த அந்தச் சிறுவனின் உடலின் அணைப்பு இளவரசன் அகத்துக்கும் ஆகத்துக்கும் இனிய அமைதியளித்தது. அவன் அந்தத் தமக்கையாகவும், அவள் அவனாகவுமே இருந்திருந்தால்...!