உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(207

இப்போது மழைபெய்யத் தொடங்கிவிட்டது. மலையினூடாகக் குளிர்வாடை வீசிற்று. ஒரு திசையிலிருந்து இடிமுழக்கம்போல ஒரு நீர்வீழ்ச்சியின் ஓசை வளரத் தொடங்கிற்று. மெல்லென்றிசைத்து வந்திருந்த அந்த அருவி மழையால் இத்தகைய பெரு நீர்வீழ்ச்சியாகப் பெருகி வந்தது. இத்தனைக் கிடையிலும், திருமறை வாசகங்களை ஓதும் குரலும் எழுந்தெழுந்து முழங்கிற்று. இத்தகைய சூழலில் கடுங்கல்லான உணர்ச்சியற்ற உள்ளங்கள்கூடச் சலிப்படையக் கூடும். கனிந்த பசுமண்போன்ற உள்ளம் படைத்த கெஞ்சி அடைந்த மனச்சோர்வுக்கு எல்லையில்லை. அவன் துயில்நீத்துப் படுக்கையில் உருண்டு புரண்டுகொண்டே இருந்தான்.

திட்டங்கள் எதிர் திட்டங்கள் அவன் கருத்துகளை ஓயாது அலைத்த வண்ணம் இருந்தன.

துறவி வழிபாட்டு நேரம்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வழிபாட்டு நேரம் உண்மையில் கழிந்து விட்டது. ஆயினும் துறவு நங்கை இந்த அகாலத்தில்கூடத் தூங்கவில்லை. தொழுது கொண்டே தான் இருந்தாள். அவள்குரல் ஒரு சிறிதும் கேட்கவில்லை யானாலும், தொழுகை மணிமாலை உருட்டிய போது ஒவ்வொரு மணியின் அசைவும் அது தொழுகை மேடையில் தட்டிய ஒலியும் இரவின் அமைதியிடையே தெளிவாகக் கேட்டன. இந்த மெல்லிய ஓசையிலே உள்ளத்தை உருக்கும் பல்வகை உணர்ச்சிகள் இருந்தன. அந்த நுண்ணிய ஒலி அருகிலிருந்து வருவதுபோல் இருந்தது.

உள்ளறையையும்

கெஞ்சியிருந்த கூடத்தையும் வேறுபிரிக்க ஒரு தட்டியே இருந்தது. அவன் அதன் ஒரு சிறிய இடை வெளியைச் சற்று விரிவுபடுத்தி, அதற்கு நேராகத் தன் விசிறியை அசைத்துச் சிறிது ஓசை உண்டு பண்ணினான். இந்த மெல் லோசை கேட்டு யாரோ மறுபுறத்தில் வந்து தயங்கி நின்று சிறிது நேரத்துக்குப்பின் செல்வது தெரிந்தது. 'யாரும் இல்லை, ஆனாலும் ஏதோ தெளிவான ஓசை கேட்டதாகத் தான்.' என்று அந்த ஆள் தனக்குள் கூறுவது போலிருந்தது. ஆனால் இறுதியில் திரும்பும் சமயம் 'சரி, ஒரு வேளை அது என் கற்பனை'யாகக்கூட இருந்திருக்கக்கூடும்' என்று கூறி அமைந்தது.