உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

அப்பாத்துரையம் - 22

இருட்டில் வந்த காலடிகள் திரும்புவது கேட்டுக் கெஞ்சி இதுதான் சமயம் என்று உரத்த குரல் கொடுத்தான். 'புத்த பகவானைப் பின்பற்றுக. அப்போது நீங்கள் செல்வது காரிருட்டிலேயே என்றால்கூட, உங்கள் வழி தவறாது' என்றான். இந்தத் தெளிவான இளங்குரல் கேட்டபோது முதலில் உள்ளே வந்த அணங்குக்கு அச்ச மேலிட்டது, ஆயினும் எப்படியோ தேறிப் பதில் எழுப்பினாள். 'அவர் எப்பக்கம் வரும்படி அழைக்கிறார் என்பதைத் தயவுசெய்து அறிய விரும்புகிறேன், அது தெரியாமல் தான் குழம்புகிறேன்' என்றாள்.

'தங்களுக்குத் திடீரென்று வந்து அச்சம் உண்டு பண்ணியமைக்கு வருந்துகிறேன். எனக்குத் தங்களாலாக வேண்டியது ஒரு சிறு செய்தி, ஒரு சிறு வேண்டுகோள் உண்டு. நான் கூறும் பாடலை உங்கள் தலைவியிடம் சென்று அறிவிக்கவேண்டும். அப்பாடல் இது:

'இளங்கொடியின் மென்தளிரைக் கண்ட கண முதலாய் ஏங்குகின்ற வழிப்போக்கன் இழையாடை நுனியில் தூங்கு பனித் துளி உலராது ஒளிர்கின்ற தன்றே!

வேண்டுகோளை ஏற்க அணங்கு தயங்கினாள்: 'நீங்கள் யாரை மனத்தில்கொண்டு பேசுகிறீர்கள், ஐயனே! இங்கே இத்தகைய செய்திகளை அறிபவர் யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்றாள். கெஞ்சி மீண்டும் வற்புறுத்தினான். “உங்கள் தலைவியிடம் இத்தகைய செய்தியை நான் கூறுவதற்கு ஒரு தனிக்காரணம் உண்டு. அதை எப்படியும் கூறி உதவினால் நான் மிகவும் நன்றியுடையவனாவேன்' என்றான்.

பாடல் அணங்கின் பேர்த்தியைப் பற்றியதென்றும், அதன் வயது பற்றிய தவறான தகவல் காரணமாகவே கெஞ்சி அவளிடம் காதல்கொள்ள எண்ணியுள்ளான் என்றும் அணங்கு ஊகித்துக் கொண்டாள். ஆனால் அப்படி ஒரு பெண் உண்டு என்பது அவனுக்கு எப்படித் தெரியவந்தது என்பதை அவள் அறியக்கூடவில்லை. சில கணங்கள் இதுபற்றி எண்ணி எண்ணி மலைப்புற்றபின் தொட்டும் தொடாமலும் திறமையாக ஒரு பாடலால் பதிலளித்தாள்.