உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

||-

அப்பாத்துரையம் - 22

பொதுவாக அவ்வளவு வெளிப்படையாக அவன் தன்னுடைய மிக அந்தரங்கமான கடிதங்களை விட்டுவைப்பதில்லை. அவை இன்னும் மறைவான தனி உள்ளறைகளிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அகப்பட்ட கடிதங்களே மிகப்பல, பலவகைப்பட்டவை, இதனால் சூஜோ அகமகிழ்வுற்றான். ஒன்றிரண்டை முழுக்க முழுக்க வாசித்துப் பார்த்தான். அவற்றில் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்த பெயர்களை யெல்லாம் துருவி நோக்கி ஆள் யார் யார் என்பதை ஊகிக்க முனைந்தான். ஒன்றிரண்டு ஊகங்கள் ஆபத்தான அளவில் மெய்ம்மையை அணுகின. ஆனால், கெஞ்சி ஒத்துக் கொள்ளாத வரையில், எல்லா ஊகங்களும் அவனுக்கு ஒரே நிலையில்தான் இருந்தன. பல ஊகங்களைத் தவறான திசையில் செலுத்திக் கெஞ்சி அவன் குழப்பத்தைப் பெருக்கி மகிழ்ந்தான்.

இறுதியில் கெஞ்சி கடிதங்களனைத்தையும் எடுத்தடுக்கி மீட்டும் உள்ளறையில் வைத்தான். ஆனால், அவன் அத்துடன் விடவில்லை. ‘என் கடிதங்களையெல்லாம் நீ பார்த்துவிட்டாய். என் இரகசியக் கடிதங்களின் தொகுதியைவிட உனது தொகுதி கட்டாயம் பெரிதாய் இருக்க வேண்டும்!' சுவைமிக்கதாயும் இருக்க வேண்டும்! எங்கே, உன் கடிதங்களையும் நான் பார்க்கட்டும், அப்போதுதான் என் உள்ளறை உனக்கு இது போல எப்போதும் மனமாரத் திறக்கும்' என்றான்.

'நீ பார்க்க விரும்பத் தக்கதாக என்னிடம் எதுவும் இருக்காது' என்று கூறிவிட்டு, கவனத்தை மாற்றுவதற்காகச் சூஜோ பெண்ணினம் பற்றிய தன் வரட்டு வேதாந்தங்களை விரித்து விளக்கத் தொடங்கினான்.

'இவள் நிறைவுடையவள்; நம் உள்ளம் நாடியது இவளையே' என்று கூறத்தக்க அளவில் எந்தப் பெண்ணும் இந்த உலகில் இருக்க முடியாது. நான் வாழ்க்கையில் கண்ட மொத்த அனுபவத்தின் முடிவு இது. மேலீடான கவர்ச்சியும் கலையார்வமும் மிக்க பெண்டிரிடையே நம் விசைக் கையெழுத்தை நயம்பட அழகோவியமாக எழுதத் தக்கவர்கள் இருக்கலாம். இக் கவர்ச்சியுடன் பேச்சு எதிர் பேச்சுகளிலும் உரை பாடலிலும் சிறந்த நாநயமும் திறமும் கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆயினும் இதற்கு மேல் ஆழ்ந்து சோதனை செய்தால், அதில் தேறுபவர்கள் இருக்கமாட்டார்கள்.