உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

47

'மேலும் பொதுவாகத் தங்கள் அழகு, தங்கள் திறங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வதில்தான் பெரும்பாலான பெண்டிர் ஈடுபட்டுவிடுகிறார்கள். சிலர் தம்முடன் போட்டியிடும் மற்றப் பெண்டிரை யெல்லாம் தூற்றும் பழக்க மிகுந்தவர்களாய், தம்மைச் சூழ அருவருப்பைப் பரப்புபவர்களாகவே உள்ளனர்.

'இன்னும் சிலர் இருக்கிறார்கள். அன்பு காரணமாக அவர்கள் தாய் தந்தையர்கள் அவர்களை அளவு கடந்து புகழ்ந்து சீராட்டிப் பாராட்டி விடுகின்றனர். குழந்தைப் பருவ முதல் அவர்கள் திரையிட்ட பலகணிக்குப் பின்னேயே அடைபட்டுக் கிடக்க நேர்வதனால், அவர்களைப் பற்றிய உண்மையான தகவல் எவருக்கும் இல்லாது போகிறது. ஏதோ ஒன்றிரண்டு கலைகளில் அவர்களுக்குள்ள தனிச் சிறப்பு மட்டுமே வெளியே தெரியவருகிறது. இந்த ஒன்றிரண்டின் மூலமே வெளியார் அவர்களிடம் அக்கறை கொள்ளத் தொடங்குகின்றனர். அழகுநடை சொல் நயம் அவர்களிடம் இருக்கிறது. உலகில் பழகாததனால் ஏற்படும் புதுமைக் கவர்ச்சியும் முனைப்பாயிருக்கிறது. தவிர, ஒன்றிரண்டு கலைகளிலேயே சிறந்த முன்மாதிரிகளை வாழ்நாளின் பெரும்பகுதியும் அவர்கள் பின்பற்றுவதனால், அந்த ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் தேர்ச்சியின் உச்ச உயர் எல்லையை அவர்களிடம் காண முடிகிறது. இவையே அவர்கள் குணநலங்களை மிகைப்படுத்திக் காட்டவும், குறைபாடுகளை முற்றிலும் மறைக்கவும் பயன்பட்டு விடுகின்றன. அவர்கள் பொறுக்கியெடுத்த அகஉரிமை நண்பர்கள் இதில் அவர்களுக்கு மிகவும் உடந்தையாய் விடுகின்றனர். 'இவர்களைப் பற்றிய புகழ்ச்சியுரை பல தடவை நம்ப முடியாத எல்லைக்குச் சென்று விடுகிறது. மதிப்புரை இன்னும் பேரளவு தவறி விடுகிறது என்று கூறத் தேவையில்லை. எனவே இவர்கள் வகையில் குணங்குறை இரண்டையும் கணித்து மதிப்பிட முயற்சி செய்கிறவர்கள் எப்போதுமே பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகிவிட நேர்கிறது.’

தன் பேச்சு ஒரே கசப்பு வேதாந்தமாகச் செல்வதைத் தானே உணர்ந்து வெட்கமடைந்தவன் போல அவன் பேச்சிடையே சிறிது தயங்கினான்.