124
அப்பாத்துரையம் - 24
சிலந்திக் கட்டடம் அழகுபடுத்தப்பட்டது. அதன் எட்டுக் கால்களும் தாமரைமலரின் எட்டு இதழ்கள் ஆயின. அருகே சிறிதுசிறிதாகப் புதுக் கட்டட அமைப்புக்கள் ஏற்பட்டு எட்டு இதழ் எண்பது இதழாயிற்று. நடுக் கட்டடம் தாமரைமலரின் பொருட்டாயிற்று. இனிய வண்ணங்கள் தீட்டப்பட்டன.வா.கை. 65 இருந்த அறை நீங்கலாக மற்றவற்றில் பல அரசியல் அரங்கங்கள் ஒவ்வொன்றாகக் குடியேறின.
வா.கை. 65 இவற்றைக் கண்டு வியப்புற்றான். அவன் மட்டும் இன்னும் மாறவில்லை. தன்னை என்ன செய்யப் போகிறார்களோ என்று மலைப்படைந்தான்.
ஆனால் எதிர்காலம் பற்றிய கவலை அவனுக்கு இல்லை. சிறைக் கூடம் அவனுக்கு இப்போது சிறைக்கூடம் அல்ல. அவன் விரும்பிய சோலைவனங்களின் நடுவேயுள்ள ஒரு மாளிகையாக அது காட்சியளித்தது.
அவன் சிறைக் கைதிகளைத் தவிர, இதுவரை யாரையும் பார்த்த தில்லை. ஆகவே ஒருநாள் ஒரு இளம்பெண் ஒரு கூடையுடன் வந்தது கண்டு அவன் ஒன்றும் தோன்றாமல் விழித்தான்.
'தாத்தா' என்றது குழந்தை.
'நீ யாரம்மா?' என்று அன்புடன் கேட்டான் அவன்.
"நான் உன் பேர்த்தி!"
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"நீ சிறையிலேயே காலம் எல்லாம் கழித்துவிட்டாய். என் தாய் என்னை இங்கு வரச்சொன்னாள்.நீ அவள் பெரியப்பாவாம்” என்றாள் அவள்.
தானும் ஒரு மனிதன் என்பதை அவன் இதுவரை மறந்திருந்தான். தனக்குக் குடும்ப வாழ்வு இல்லாவிட்டாலும், தான் பிறந்த குடும்பம் பெற்றுப் பெருகி வாழ்கிறது என்ற எண்ணம் அவன் உள்ளக் கனிவைப் பெருக்கிற்று.
"நீ எப்படி இங்கே வந்தாயம்மா? எதற்காக வந்தாய்?” என்று அவன் கேட்டான்.