பிறமொழி இலக்கிய விருந்து -2
(231
மனம்போல் நாம் நடப்பதானால், அவளைத் தேடிக் கண்டு பிடித்து விடலாம்" என்று கூறினாள்.
தாய் தந்தையர் அவள் அறிவுரையை ஏற்று எங்கும் மியூகியைத் தேட ஆளனுப்பினர். அஸாகேயும் அதே நோக்கத்துடன் புறப்பட்டு ஊர் ஊராக அலைந்தாள்.
வீட்டை விட்டு இரவில் வெளியேறிய மியூகி நேரே ஆற்றை நோக்கித்தான் நடந்தாள். காதலில்லா வாழ்வை விடச் சாதலே மேல் என்ற எண்ணமே அச்சமயம் அவள் உள்ளத்தில் மேலெழுந்து நின்றது. ஆனால் செல்லும் வழியிலேயே இரு வீணர்கள் அவளை இடைமறித்துத் தொல்லை தரத் தொடங்கினர். உயிரையே இழந்துவிடத் துணிந்து சென்ற அவளுக்கும் வழியில் உயிரினும் அரிய மானத்தைக் காக்கும் அவசியம் ஏற்பட்டது. மியூகி அந்த வீணர்களிடமிருந்து தப்ப ஒரு சூழ்ச்சித் திட்டம் வகுத்தாள். இருவரில் வலிமை மிகுந்தவன் எவனோ அவனைத் தான் பின்பற்றிச் செல்லத் தடையில்லை என்று கூறி அவள் அவர்களைப் போட்டியிட வைத்தாள். இருவரும் ஒருவர் பிடியில் ஒருவர் சிக்கிக் கிடக்கும் சமயம் பார்த்து அவள் மெல்ல நழுவி மறைந்தாள்.
ஆற்றின் செங்குத்தான கரை அவள் மனதில் அச்சத்தை வார்க்கவில்லை. கரைமீது ஏறி நின்றுகொண்டு அவள் தன் வாழ்க்கைக்கு ஒரேயடியாய் முடிவுகட்டிவிட இருந்தாள். சுழித்துச் சுழித்துச் செல்லும் நீர், ஆற்றின் ஆழம், அங்கே மறைந்து கிடக்கும் ஆபத்துக்கள் அவள் மனதிலே சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. அவள் கால்கள் தண்ணீரில் தாவ மெல்ல எழுந்து நிமிர்ந்தன. இன்னும் ஒரே ஒரு அடியெடுத்து வைத்து விட்டால்.. ஆனால் அதற்குள் ஒரு இரும்புப்பிடி அவளைப் பின்னால் இழுத்துக் கொண்டது. எங்கே இன்னொரு ஆடவன் கையில் சிக்கி விட்டோமோ என்று அவள் திகிலடைந்தாள். ஆனால் அது ஆடவனல்ல; பெண்! அதுவும் ஒரு கிழவி. ஒரு கிழவியின் கைக்கு இத்தனை வலிமை எப்படி வந்தது என்று மியூகி வியந்தாள். அடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவ் வியப்பை மிகுதிப்படுத்தின.
கிழவி இனிக்க இனிக்கப் பேசினாள். “பெண்ணே, இந்த இளவயதில் நீ ஏன் உன்னையே மாய்த்துக் கொள்ள வேண்டும்?