282
அப்பாத்துரையம் - 24
சூழலை உண்டுபண்ணும். இவற்றின் எதிரொலியாக அகத்தே அச்சம், ஐயம், கோழைமை, உறுதியின்மை, ஆகிய வேறு தீய கருத்துக்கள் ஏற்பட்டு, அவற்றின் பயனாக சூழல்களும் பெருகும். நற்கருத்துக்கள் இவற்றுக்கு நேர்மாறான இன்சொல், நயநாகரிகம், அன்பாதரவு ஆகிய செயல்களையும் சூழல்களையும் கருத்துக்களையும் வளர்க்கும்.
தீய கருத்துக்கள் பிறரிடமும் தீய கருத்துக்களைத் தூண்டிப் பகைமையை வளர்க்கும். அவற்றை ஒழித்தால் எங்கும் நட்பும், நட்புச் சூழலும் பெருகுவது காணலாம். ஏனெனில், ஊழ் என்பது அவன் சூழலின் சூழ் ஆற்றல். அதனை ஆக்குவது நன்மை தீமைப்பண்புகளுக்குரிய கருத்துக்களே. தன் கருத்தை இயக்குபவன் இதன் மூலம் தன் ஊழைத் தானே ஆக்கி ஊழை வென்றவன் ஆகிறான். தன் ஊழைத் தான் ஆக்குபவன் ஒருவகையில் தன் உலகத்தைத் தானே படைப்பவன் ஆகிறான். விரும்பிய நிலையே வரும் பிறி திலையே; பொருந்துறு சூழலின் பொறுட்பெதும் இலையே; வருந்துவர் சூழலை ஊழெனக் கொண்டவர்; திருந்திய பண்பினர் கொளார்அதன் விலையே!
காலமும் இடமும், சூழலின் மடமும், மாலுற அடக்கி ஆண்டிடும், பண்பே! ஆலித் தரற்றும் ஊழதன் அடமும்,
காலுற மடக்கிக் கொளும்அதன் பணியே!
மாளா உயிரின் தாளாம் உறுதி
கேளாக் கொள்ளாப் பொருளிலை உலகில்; நாளால் எந்தத் திண்ணிய தடையையும் வாளால் என்னத் துளைத்திடும் அதுவே!
மட்டிலா விரைவில் முட்டிடா தொழிக! கட்டிநெய் உருகக் காத்திடல் நலமே! கட்டளை வல்ல கருத்தெழுந் திடினே, தட்டற வானமும் தாளுற வருமே!