உடல்
4. உளநலமும் உடல்நலமும்
உள்ளத்தின் பணியாள்: உள்ளம் உடலின் பணியாளன்று. உள்ளம் கிளர்ந்தெழுந்து செயலாற்றும் போதும் சரி, தன்னியல்பாக இயங்கும்போதும் சரி, உடல் அதன் வழியேதான் நிற்கும். ஒழுங்கமைதி மீறிய எண்ண அலைகளுக் கிணங்கி உடல் நோவும் நலிவும் அடைகின்றது. ஒழுங்கமைதி வாய்ந்த கருத்துக்களே உடல்நலம், இனநலம், அழகுநலம் ஆகிய மூவகை நலங்களையும் உடலுக்கு அளிக்கின்றது.
மற்ற எல்லாச் சூழல் நிகழ்வுகளையும்போலவே நோயும் உடல்நலமும் கருத்தில் கருக்கொண்ட நிகழ்வுகளே. நலிவுற்ற எண்ணங்கள், உணர்ச்சிகள், நோயுற்ற உடல்மூலமாகவே புறந்தோன்றுகின்றன. துப்பாக்கிக் குண்டுகள் ஒருவனைக் கொல்வதுபோலவே அச்ச எண்ணங்களும் மனிதனைக் கொல்வதைக் காணலாம். துப்பாக்கிக் குண்டுகள் எப்போதும் எல்லாமனிதரையும் கொல்வதில்லை. அச்சம் எப்போதும் எத்தனையோ பேரைப் படிப்படியாகக் கொன்றுகொண்டு வருகிறது. நோய் அச்சம் நோயைத் தருகிறது. அதை வளர்க்கிறது. கவலைகள் உடலைக் கரைக்கின்றன. இவை நோய்க்கு வாயில் திறந்து வைப்பதுடன், உடலில் குடியிருக்கவும் வளரவும் வகைசெய்து கொடுக்கின்றன. துப்புரவற்ற கருத்துக்களோ நரம்புமண்டலத்தைத் தாக்கி அதிர்ச்சியுறச் செய்து, அதன் மூலம் உடல்நிலை முழுவதையும் கெடுக்கிறது.
உடல் புறத்தே கெட்டிமையுடையதாகத் தோற்றுகிறது. ஆனால் உண்மையில் அதனினும் நொய்ம்மையும், தொய்வும், களிமண் போன்ற குழைவும் உடைய இன்னொரு பொருளைக் காண முடியாது. ஏனெனில் அது கண்காணா எண்ண அலைகளின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இசைந்து இழைந்து இயங்குகின்றது. மட்பாண்டங்கள் செய்பவன் கலையுள்ளத்தின்