286
அப்பாத்துரையம் - 24
நல்லிலையின் பழுப்பையும் நற்கனியின் கனிவையும் முற்றிய பயிரின் மணத்தையும் போல இனிமை பயப்பது. அது இளமை நலத்துடன்கூடப் போட்டியிடத் தக்க முதுமை நலம். பின்னது காண்பவர்க்கு அதனையுடையவர் துன்பத்தினும் மிகுதி துன்பந்தருவது.
நேர்மை, அன்பு, தூய்மை ஆகிய நற்பண்புகளின் தோழமை யுடன் வாழ்ந்தவரின் முதுமை இளமையிலும் காணமுடியாத மூதமைதியுடையது. அது படிஞாயிற்றின் மாலைச்செவ்வான வண்ணத்தின் பண்ணமைவுடையது.
அண்மையில் ஒரு மெய்யறிவாளரின் இறுதி ஓய்வை நான் கண்ணுற நேர்ந்தது. அவர் வயதில்தான் முதுமை அடைந் திருந்தார். தோற்றத்திலன்று. அவர் மாள்வின் அமைதி நலம் வாழ்வின் அமைதி நலத்துடன் போட்டியிடுவதாயிருந்தது. முன்னதன் இனிமை பின்னதன் இனிமையிற் சற்றும் குறைபட வில்லை. பெரும்பாலும் சாவுக்காட்சியைக் காண்பவர் எவரும் தம் சாவை நினைத்து வருத்தத்தின் சாயல் அடையாமல் இருப்ப தில்லை. ஆனால் அப்பெரியார் மாள்வில் நான் அடைந்த உணர்ச்சி இதுவன்று. அது இதனின் வேறான பல உணர்ச்சி களின் கூட்டமைதியாயிருந்தது. அவர் மாள்வின் நலத்துக்கு முன் நான் என் வாழ்வு நலத்தை ஒப்பிட்டு வெட்கமடைந்தேன். என் வாழ்க்கைப் பண்பை உயர்த்தி அத்தகைய மாள்வுநலம் பெற வேண்டும் என்ற அவாவே என் மனதில் முனைப்பாயிருந்தது. அத்துடன் இத்தகைய பெரியார் வாழ்வுக்கும் மாள்வுக்கும் உரிய உலகம் பெருமையுடையது என்ற எண்ணமும், அத்தகைய உலகில் அவருடன் வாழ்ந்து அவர் வாழ்வு மாள்வுகண்டு பயன்பெறும் பேறும் எனக்குக் கிட்டின என்ற தன்னிறைவும் என்னிடம் நிலவின.
உடலுரிமையால் வரும் இயற்கைத் துன்பங்களில் கூட உள உரிமையால் பெறத்தகும் நல்லுவகையுணர்ச்சியைப் போல நோவகற்றும் நன்மருத்துவனும் ஆறுதலளிக்கும் நல்ல நண்பனும் வேறு கிடையார். அவ்வுணர்ச்சியால் நோவுநொம்பலங்கள் சிதறடிக்கப்படுகின்றன. நோவு எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. துன்பத்தினும் கொடியன துன்பத்தின் சாயல்களான தீயுணர்ச்சிப் படலங்கள். ஏனெனில் அவை இயற்கைத் துன்பத்திலிருந்து செயற்கைத் துன்பங்களை வித்திட்டு வளர்ப்பவை. சில சமயம்