பிறமொழி இலக்கிய விருந்து -2
287
இக்களைப்பயிர் தன்னைத்தானே பெருக்கி நிலையாகத் தழைத்து இன்பங்களையும் இன்பங்களுக்குக் காரணமான நல்லெண்ணங் களையும் நிலையாக ஒதுக்கித் தடுத்து வைத்துவிடும். இந்நிலையில் மனிதன் ஓர் அழுகை வேதாந்தியாகிறான். கண்டதிலெல்லாம் ஐயமும் வெறுப்பும், அச்சமும் அழுக்காறும், சினமும் வன்மமும் கொண்டு தன் வாழ்வைத் தானே மீளாப் பழிக்கூடம் ஆக்கிக் கொள்கிறான்.
துன்பத்தில் அமைதியும் உவகையும் துன்பந்தடுப்பதுடன் நில்லாமல், துன்பம் இங்ஙனம் படிந்து தோய்ந்து பெருக்கமுற்றுத் துன்பப் படலங்களாக வாழ்க்கை வானத்தை மறைக்காமல் காக்கின்றன. நீடித்த நல்லெண்ணமும் அன்பும் துன்பத்திரையை விலக்குவதுடன் அமையாது, இன்பப் பண்ணையின் வாயிலும் கடந்து பேரின்பக் கோயிலுக்கு இட்டுச் செல்லும். அவற்றை உடையவனை மட்டுமன்றி அது அவன் சூழ்நிலையையும் உயர்வு படுத்தி அவன் காற்சுவடு பட்ட இடத்தையும் பொன்னியல் புடைதாக்கும்.